“பாஜகவின் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம்”: மல்லிகார்ஜூன கார்கே

Published On:

| By Selvam

பாஜகவின் அனைத்து சவால்களையும் நாங்கள் எதிர்கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் 85-வது வழிகாட்டு குழு கூட்டம் நேற்று (பிப்ரவரி 24) துவங்கியது. இன்று இரண்டாவது நாள் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “காங்கிரஸ் கட்சியின் திருப்புமுனையாக அமைந்துள்ள பாரத் ஜோடா யாத்திரையுடன் எனது அரசியல் இன்னிங்ஸ் நிறைவடைந்துள்ளது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, “2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி திறமையான தலைமையின் கீழ் ஆட்சி நடத்தியது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள காத்திருக்கிறோம்.

பாஜகவின் அனைத்து சவால்களையும் நாங்கள் எதிர்கொள்வோம். பாரத் ஜோடோ யாத்திரை இந்தியாவிற்கு சூரிய ஒளி போன்று அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் ராகுல் காந்தியுடன் கைகோர்த்து, காங்கிரஸ் இன்னும் தங்கள் இதயங்களில் இருப்பதை நிரூபித்துள்ளனர்.

ராகுல் இளைஞர்களுக்கு உத்வேகமாக உள்ளார். இந்த கூட்டத்தொடரை நிறுத்துவதற்காக, பாஜக எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் மீது அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்கின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை எதிர்கொண்டு இந்த கூட்டத்தொடரை நடத்தி வருகிறோம்.” என்று தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துகொண்டிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக அசாம் காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. பின்னர் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை குறிப்பிட்டு மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.

செல்வம்

ரூ.1000 : மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்!

பொன்னியின் செல்வன் 2: பார்த்திபன் சொன்ன தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel