மணிப்பூர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இதுகுறித்து பேசாமல் அமைதி காக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு துவங்கியது. கூட்டம் துவங்கிய சில மணி நேரத்தில் சமீபத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாநிலங்களவை மதியம் 12 மணிக்கு துவங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு மாநிலங்களவை துவங்கியதும் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து, “மணிப்பூர் பற்றி எரிகிறது. பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றியெல்லாம் பேசாமல் அமைதி காக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வெளியே இதுகுறித்து பேசுகிறார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை போல மதியம் 2 மணிக்கு துவங்கிய மக்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்