காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்திற்கு வருவதற்கோ பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றும் இன்றும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசியபோது, “காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்திற்கு வருவதற்கோ பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் பிறந்தநாளின் போது சென்னையில் நான் கூறியிருந்தேன். அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். தன்னாட்சி அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாறி வருகிறது.
நமது தலைவர்கள் மீது பொய்யான கிரிமினல் வழக்கு போடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய அரசியலமைப்பு அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது விலைபேசப்படுகிறார்கள்.
26 கட்சிகள் இங்கே கூடியுள்ளோம். 11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக தனித்து 303 இடங்களை பெறவில்லை. கூட்டணி கட்சிகளின் வாக்குகளை பெற்றே வெற்றி பெற்றது. பின்னர் கூட்டணி கட்சிகளை நிராகரித்தது.
மாநில அளவில் எங்களுக்குள் சிலருக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதை நாங்கள் அறிவோம். இந்த வேறுபாடுகள் கருத்தியல் சார்ந்தது அல்ல. சாமானியர்கள், நடுத்த வர்க்கத்தினர், இளைஞர்கள், ஏழைகள், தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் அவர்களது உரிமைகள் நசுக்கப்படுவதை பார்க்கும்போது நம்முடைய பிரச்சனைகள் பெரிது அல்ல” என்று தெரிவித்தார்.
செல்வம்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம்… உண்மை பலம் என்ன?
ஜவான்: நயன்தாரா தோற்றம் வெளியீடு!