எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி Indian National Developmental Inclusive Alliance என்று பெயரிடப்பட்டுள்ளது. எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகள் குரலை நசுக்கும் இதுபோன்ற ஆட்சியை நான் ஒருபோதும் கண்டதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி 30 கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. இந்தியாவில் இத்தனை கட்சிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. முன்பு இதுபோன்ற கூட்டங்களை அவர்கள் நடத்தவில்லை. பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுவதால் தற்போது என்டிஏ கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இங்கு நாங்கள் கூடியுள்ளோம். அடுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் “INDIA”
அமலாக்கத் துறை விசாரணைக்கு புறப்பட்டார் பொன்முடி