தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராகச் சோனியா காந்தி உள்ள நிலையில், புதிய தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது.
இத்தேர்தலில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் யாரும் போட்டியிடாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வாக்குகள் இன்று (அக்டோபர் 19) எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. சோனியா, ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவு பெற்றுள்ள கார்கே வெற்றி பெறுவார் என்று கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்து அடுத்த காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனா கார்கே வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில் கார்கேவுக்கு 7,897 வாக்குகளும், சசிதரூக்கு 1,000 வாக்குகளும் கிடைத்துள்ளன. 416 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் கட்சியில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராகிறார். வெற்றி பெற்ற கார்கேவுக்கு சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், ”காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பது கெளரவம், பெரிய பொறுப்பு. அந்த பணியில் ஈடுபடவுள்ள கார்கேவுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவராகும் மல்லிகார்ஜுனா கார்கே 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்பு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக கார்கே இருந்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கார்கே ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
எடப்பாடி “எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்க” – எம்.எல்.ஏக்கள் கோரிக்கை!
காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!