பிரதமர் நரேந்திர மோடி நூற்றுக்கணக்கான பொய்களை பேசியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று(அக்டோபர் 2) குற்றம்சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், ஹரியானா தேர்தல் வருகிற 5ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இரண்டு தேர்தல்களின் முடிவுகளும் வருகிற 8ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரியில் தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டார்.
பரப்புரையில் அவர் “ இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளாகும். அவர்கள் இருவருக்கும் எனது அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.
மகாத்மா காந்தி உண்மை மற்றும் அகிம்சையை மக்களுக்குப் போதித்தார். ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் பேசுகிறார்கள் என்பது மக்களாகிய உங்களுக்குத் தெரியும்.
பிரதமர் நரேந்திர மோடி மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய நூற்றுக்கணக்கான பொய்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவது, பணவீக்கத்தைக் குறைப்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என அனைத்தும் பொய் என நிரூபணமாகியுள்ளது.
“ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்ற முழக்கத்தை லால் பகதூர் சாஸ்திரி வழங்கினார். ஹரியானா அதிகளவில் விவசாயிகளும், ராணுவ வீரர்கள் கொண்ட மாநிலம்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் இரட்டை இயந்திர அரசு ராணுவ வீரர்களையும் விவசாயிகளின் வாழ்க்கையையும் நாசமாக்கியுள்ளது.
ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின் போது ஹரியானா மக்களின் உற்சாகத்தை நான் பார்த்தேன்.தற்போது அவரது ஹரியானா ‘விஜய் சங்கல்ப் யாத்திரை’ நடந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கப் போவது மட்டுமின்றி அபார பெரும்பான்மையுடன் சரித்திரம் படைக்கப் போகிறது என்பது இந்த யாத்திரையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.
மேலும் ஹரியானா மக்களைப் பற்றிக் கூறுகையில் “ ஹரியானா மக்கள் எந்த வேலை செய்தாலும் அதை முழு மனதுடன் செய்கிறார்கள். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கக்கூடிய அளவுக்கு ஹரியானா விவசாயிகள் தானியங்களைப் பயிரிடுகிறார்கள்.
இந்த முறை ஹரியானா மக்கள் முழு மனதுடன் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்ய முடிவெடுத்துள்ளனர்.” என்று மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘ஜன் சுராஜ்’… புதிய கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்
ஈரானிடம் அணுகுண்டு உள்ளதா? உலக நாடுகள் அச்சம்!
தமிழக மீனவர்கள் கைது… இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் பாமக