பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை நான் சாகமாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மூ காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு நேற்று (செப்டம்பர் 29) கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசினார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயக்கம் ஏற்பட்டு லேசாக சரிந்த அவரை மேடையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஓடிவந்து தாங்கிப் பிடித்தனர்.
இதையடுத்து சில நிமிட ஓய்வுக்கு பின்னர் பேசிய கார்கே, “நான் அவ்வளவு சீக்கிரம் இறந்துவிடமாட்டேன். பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன். ஜம்மூ காஷ்மீர் மக்களுக்காக போராடுவேன்” என்று கூறினார்.
கார்கேவின் கருத்துக்கு உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 30) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மோடியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகுதான் நான் இறப்பேன் என்று கூறி தேவையில்லாமல் தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களில் பிரதமர் மோடியை இழுத்து பேசியுள்ளார் கார்கே. இது முற்றிலும் வெறுக்கத்தக்க வெட்கப்படக்கூடிய பேச்சு.
காங்கிரஸார் பிரதமர் மோடியின் மீது எவ்வளவு வெறுப்பும் பயமும் கொண்டுள்ளனர் என்பதையும், தொடர்ந்து மோடியையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.
கார்கேவின் உடல் நலத்தை பொறுத்தவரை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று பிரதமர் உட்பட நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம். அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். 2047-ல் அகண்ட பாரதம் உருவாகும் வரை வாழட்டும்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
”ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது”: பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் உத்தரவு!
இந்த வாட்டி ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு… பிக்பாஸ் யார் யார் போட்டியாளர்கள்?