விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தியதை கண்டித்து செப்டம்பர் 13-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களிடம் சுமார் 20 இயந்திரப் படகுகளும், 1250 விசைப்படகுகளும், 200 நாட்டுப் படகுகளும் உள்ளன.
அதேபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர். அவர்களிடம் 12 இயந்திர படகுகளும் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் உள்ளன.
சென்னையை அடுத்து, கடலூர் மாவட்டத்தில்தான் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. நடுவில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்களுடைய விசைப் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்த, இரண்டு மாவட்டங்களிலும் மீன்பிடித் துறைமுகங்கள் இல்லை.
இதன் காரணமாக, புயல், சூறாவளி காலங்களில் இரு மாவட்டங்களிலும் உள்ள மீன்பிடிப் படகுகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், அழகன்குப்பம், பக்கிங்ஹாம் கால்வாயிலும், ஆலம்பராகோட்டை அருகிலும் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அதிமுக அரசு, கால்நடைத் துறை மூலம் 6.2.2020 அன்று அரசாணை எண், 28-ன் படி, சுமார் ரூ. 235 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, பணிக்கான பணித்தளம் ஒப்பந்ததாரருக்கு ஒப்படைக்கப்பட்டு, 7.1.2022 முதல் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் தனியார் ஒருவர், இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் முட்டையிட முடியாது; கடல் ஆமைகளின் இனப் பெருக்கம் குறையும் என்று கூறி பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பசுமைத் தீர்ப்பாயத்தில் தனியார் ஒருவரால் போடப்பட்ட வழக்கை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, சென்னை முதல் கடலூர் வரை உள்ள நீண்ட நெடிய கடற்கரையில் ஒரே ஒரு மீன்பிடித் துறைமுகம் கட்டுவதால், கடல் ஆமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது போன்ற பல முக்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டி இவ்வழக்கை வாதிடாததால், பசுமைத் தீர்ப்பாயம் இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய தீர்ப்பளித்துள்ளது.
2019-20ல் அதிமுக அரசில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் இப்போது, திமுக அரசின் வற்புறுத்தல் காரணமாக, மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கு எதிராக அறிக்கை அளித்துள்ளதாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கு காரணமாக துறைமுகம் கட்டும் பணிகளை திமுக அரசு நிறுத்தியுள்ளது.
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயனடையும் வகையில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு நிறுத்தியதற்கு, எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிர்வாகத் திறனற்ற மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து அதிமுக கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகின்ற 13.9.2023 – புதன் கிழமை காலை 9 மணி அளவில், மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்