அண்ணாமலை ஆடு மேய்க்க தான் போகணும்: மநீம கண்டனம்!

அரசியல்

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து தற்போது ஆளைக் கடிக்க முனைகிறார் பா ஜ க தலைவர் அண்ணாமலை என மக்கள் நீதி மய்யம் இன்று ( அக்டோபர் 12 ) கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு ஒரு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி விமர்சித்துப் பேசியுள்ளார்.

இதனை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அண்ணாமலைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் , கலிபோர்னியாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலையின் பேச்சை கண்டிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் இன்று ( அக்டோபர் 12 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

makkal needhi maiam slams annamalai for teased about kamal

“தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது.

வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று ஒதுக்கித் தள்ளலாம் என்று பார்த்தால் அவர் பேசியது நம்மவர் கமல்ஹாசன் பற்றி.

ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பதுபோல் இப்போது நம்மவரை கடித்துக்குதற முனைந்திருக்கிறார்.

கமல்ஹாசன் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ்ஏஞ்சல்ஸ் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார்.

கமல்ஹாசனின் லாஸ்ஏஞ்சல்ஸ் பயணத்தைப் பற்றி இவர் கலிபோர்னியா விலிருந்து பேசுகிறார்.

கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது?.

அதே அமெரிக்கவில் போய் அரசியல் பேசும் இவர் கமல்ஹாசனை கேலி செய்கிறார்.

தன் சம்பாத்தியத்திற்கு ஒரு தொழிலை வைத்துக்கொண்டு மக்களுக்காக பாடுபடும் கமல்ஹாசனை, அரசியலில் சம்பாதிப்பவர்கள் கேலி பேசுவது புதிதல்ல.

எனவே அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் திரைப்பட காட்சி ஒன்றின் நேர்காணலில் ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கமல் ஒரு வரலாற்று உண்மையை கூறினார்.

அதுவும் காஞ்சிப் பெரியவர் சொன்ன உண்மையை, பத்திரிகையாளர், நடிகர் சோ ஒப்புக்கொண்ட உண்மையை, அண்மையில், இவரது கட்சியிலிருக்கும் சுப்பிரமணிய சாமி வழிமொழிந்த உண்மையைத்தான் கமல் கூறினார்.

அதையெல்லாம் மறுக்க திராணியற்ற அண்ணாமலை, கமல்ஹாசன் மீது பாய்கிறார்.

இப்படி அர்த்தமற்ற பேச்சை தொடர்ந்து பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கனவே சொன்னபடி, ஆடு மேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும்.

ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவல் அதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நெல் கொள்முதல்: ராதாகிருஷ்ணன் டெல்லி பயணம்!

டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மாயாஜால வீரர்கள்!

+1
1
+1
4
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *