தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஏப்ரல் 6 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மாணவர்களின் முன்னிலையில் பேசும் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வெளிநாட்டு நிதியுடன் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதா என்று மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர்.
துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.
வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் “ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சித்த ஆளுநர் ரவி, நீங்கள் இருப்பது ராஜ்பவன், ரவி பவன் அல்ல என்பதை நினைவில் கொள்க” என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
Comments are closed.