மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 21) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கினார். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சி முதல்முறையாக போட்டியிட்டது.
இதில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத மக்கள் நீதி மய்யம், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தநிலையில், கடந்த மாதம் கமல்ஹாசன், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்டார்.
பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தநிலையில், பிப்ரவரி 21-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கப்பட்டு 6-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை ஏற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மக்கள் நீதி மய்யம் உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்