makkal conference in trichy

மாபெரும் மக்கள் மாநாடு: பண்ருட்டி ராமச்சந்திரன்

அரசியல்

திருச்சியில் வரும் ஏப்ரல் 24 தேதி மாபெரும் மக்கள் மாநாடு நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்ரல் 7) அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,

”அதிமுக மாயையில் சிக்கியுள்ளது. பொதுக்குழு, மாவட்டச் செயலாளர்கள் முறைப்படி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தலைமை தான் அவர்களை நியமிக்கிறது. அவர்கள் எல்லாம் சேர்ந்து தலைமையை நியமிக்கிறார்கள். எனவே, அவர்களின் பொதுக்குழு என்பது தொண்டர்களுக்கு சம்பந்தம் இல்லாத போலியான ஒன்று.

பொதுக்குழுவை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றோம். இந்த பொதுக்குழு செல்லும் என்றார்கள். ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிடவேண்டும் என்பதற்காகவே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

பொதுக்குழு செல்லும். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்லமாட்டோம் என்று தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்கினார்கள். எனவே மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, ’பொதுக்குழுவே செல்லும் என்று உச்சநீதிமன்றம் சொன்ன போது தீர்மானங்கள் செல்லாமல் போய்விடுமா?’ என்று உயர்நீதிமன்றம் கேட்கிறது.

ஒரு கடைநிலை உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் கூட 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுக்க வேண்டும். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரை ஒரே நாளில் நீக்கியது விதிகளுக்குப் புறம்பானது.

ஆனால் நாங்கள் தொடுத்த வழக்குகள் நீதிமன்றத்தில், கால்பந்தாட்டத்தில் உதைபடுகிற பந்தைப் போல அலைக்கழிக்கப்படுகிறதே தவிர, நாங்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

இந்த மாயை எப்போது விலகும் என்றால் மக்கள் மன்றத்திற்கு சென்றால் விலகும். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை வந்துள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் 6 அம்சங்கள் அதிமுகவிற்கு சாதகமாக இருந்தன.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவதற்குத் தடை இல்லை. இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை இல்லை.

அதிமுக வாக்கு வங்கி பிளந்து விடக்கூடாது என்பதற்காக எங்களது வேட்பாளர் மற்றும் டிடிவி தினகரன் வேட்பாளர் திரும்பப் பெறப்பட்டனர். இதனால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே இருந்தது. கூட்டணி தர்மம் என்ற பெயரில் பாஜகவும் ஆதரவு அளித்தது.

ஆனால் இவ்வளவு அம்சங்கள் இருந்தும் பழனிசாமி தலைமையில் பணபலம், படைபலம் அனைத்தையும் பயன்படுத்தியும் பொதுமக்கள் அளித்த தீர்ப்பு அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தான் உணர முடிகிறது.

மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் எங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்பிற்கு ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது.

எங்கள் நிலையை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்வதற்கு வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் ஒரு மாபெரும் மக்கள் மாநாடு நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுகவின் 51வது ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழாவாக மாநாட்டை நடத்த தீர்மானித்திருக்கிறோம்.

இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளரும், தலைமை கழக நிர்வாகிகளும் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர்” என்று பேசினார்.

தொடர்ந்து ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுக செயற்குழு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “இனி அவர்களை பற்றி கவலைப்படப்போவதில்லை, பொருட்படுத்தப்போவதில்லை, விமர்சிக்கப்போவதில்லை, பேசப்போவதுமில்லை. எங்கள் பணியை நாங்கள் தொடருவோம்” என்றார்.

மோனிஷா

கர்நாடக தேர்தலில் போட்டி?: எடியூரப்பாவை சந்தித்த ஓபிஎஸ் அணி

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *