மீண்டும் அதிமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு முக்கிய பதவி!

Published On:

| By christopher

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நால்வரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜனவரி 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர்கள் வேலுசாமி மற்றும் முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி ஆகிய நால்வர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மைத்ரேயன் கடந்த 1991ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999ஆம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார்.

அதன்பின்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

2002ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது அணியை சேர்ந்தவர்கள் நீக்கப்பட்டபோது மைத்ரேயனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து 2023ஆம் ஆண்டு டெல்லியில் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் மைத்ரேயன் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார். அதனையடுத்து சில மணி நேரத்திலேயே, மைத்ரேயன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது மைத்ரேயன் உட்பட நால்வரை அமைப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளார் எடப்பாடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share