ராகுல் பேச்சுக்கு திரிணாமுல் எம்.பி. மகுவா மொய்த்ரா பதிலடி!

அரசியல்

மேகாலயா பிரச்சாரத்தில் ராகுல்காந்தியின் பேச்சுக்குப் பதிலடியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா பேசியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதியன்று நடைபெறுகிறது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. பிரச்சாரம் முடிவடைவதற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளின் தலைவர்களும் உச்சகட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மற்ற கட்சிகளின் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த புதன்கிழமை பிரச்சாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க.வையும் மத்திய அரசின் போக்கையும் கடுமையாகச் சாடினார்.

அத்துடன், பா.ஜ.க.வுக்கு எதிர்வரிசையில் இருந்துவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மீதும் பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

mahua moitra hits back at rahul gandhi over tmc ideas

முன்னதாக, 2018ஆம் ஆண்டுவரை மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக இருந்துவந்தது. காங்கிரசின் முதலமைச்சர் முகுல்சர்மா, 2021ஆம் ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.களுடன் திரிணாமுல் கட்சிக்குத் தாவினார். அதிலிருந்தே இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் போக்கு வலுத்தது.

இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், ”திரிணாமுல் கட்சியின் வரலாறு மக்களுக்குத் தெரிந்ததுதானே.. மேற்குவங்கத்தில் நிகழ்ந்த வன்முறைகளைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஊழல் முறைகேடுகள்… குறிப்பாக சாரதா ஊழல்… அவர்களின் பாரம்பரியம் இப்படித்தான் இருக்கிறது.

”என்றவர், “கோவா தேர்தலில்கூட பெரும் பணத்தோடு அவர்கள் (போட்டியிட) வந்தார்கள். அந்த முடிவு பா.ஜ.க.வுக்கு உதவியாக இருந்தது. அப்படியேதான் மேகாலயாவிலும் செய்கிறார்கள். மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசின் இந்தப் போட்டி பா.ஜ.க. வலிமை அடையவும் வெற்றிபெறவும்தான் உறுதியாகப் பயன்படும்.” என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், நாகாலாந்து பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதற்கு நேர்மாறாக, ராகுலின் பேச்சு இருந்ததால் காங்கிரஸ் தரப்பிலேயே அதிர்ச்சி அலைகள் உருவாகின.

பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளுடன் தொடர்ச்சியாக தாங்கள் பேசிவருவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி உருவாக்கப்படும் என்று கார்கே தெரிவித்திருந்தார்.

அந்தப் பேச்சின் சூடு தணியும் முன்னரே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காட்டமாகச் சாடிப் பேசி கொதிப்பைக் கூட்டிவிட்டார், ராகுல். அவரின் பேச்சை திரிணாமுல் கட்சி ரசிக்கவில்லை என்பதைவிட, கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

mahua moitra hits back at rahul gandhi over tmc ideas

அதிரடிப் பேச்சுகளுக்குப் பெயர்போன திரிணாமுல் கட்சி எம்.பி. மகுவா மொய்த்ரா, ராகுலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். வடக்கு ஷில்லாங்கில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ” பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கக் கூடிய அளவுக்கு இருந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிட வேண்டிய தேவையே இல்லையே.” என்றார்.

”மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெறாத காரணத்தால்தான், பா.ஜ.க.வுக்கு மாற்று சக்தியாக வரவேண்டும் என நாங்கள் களத்தில் இறங்கியிருக்கிறோம். திரிணாமுல் கட்சிதான் மாற்று சக்தி.” என்றும் மகுவா மொய்த்ரா குறிப்பிட்டார்.

மேலும், “ நாங்களும் அப்படியே கையைக் கட்டிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்துவிட்டால், அடுத்த தேர்தலிலும் . பா.ஜ.க. வெற்றிபெறுவதை வேடிக்கை பார்க்கவேண்டியதுதான். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துகொண்டே போகும்.” என்றும் இடித்துப் பேசினார்.

தமிழ்க்கனல்

ஈரோடு கிழக்கு : தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்!

உக்ரைன் ரஷ்யா போர் வாக்கெடுப்பு: புறக்கணித்த இந்தியா

+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *