மக்களவையில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா இன்று (டிசம்பர் 8) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
நவம்பர் 2-ஆம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன் மஹுவா மொய்த்ரா விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணையின் போது தன்னிடம் பாரபட்சமான முறையில் கேள்வி எழுப்பியதாக குற்றம்சாட்டி பாதியில் வெளியேறினார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹூவா மொய்த்ராவை நீக்குவதற்காக நவம்பர் 9-ஆம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஒப்புதல் அளித்தது.
விசாரணை அறிக்கையை மக்களவையில் இன்று சபாநாயகர் ஓம் பிர்லா முன்பாக நெறிமுறைகள் குழு தாக்கல் செய்தது.
ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின் அடிப்படையில் மஹூவா மொய்த்ராவை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார்.
குரல் வாக்கெடுப்பின் மூலம் மஹூவா மொய்த்ராவை எம்.பி பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பளிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று நக்சல்… இன்று அமைச்சர்: தெலங்கானாவை கலக்கும் சீதாக்கா- யார் இந்த தன்சாரி அனுசுயா?
“எடப்பாடி சொல்லும் காரணங்கள்” : நீதிமன்றம் கேள்வி!