பாஜக தலைமையிலான மகாயுத்தி கூட்டணியின் பிரச்சாரம் வெறுப்பால் நிறைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஆளும் கூட்டணியான மகாயுத்தியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதியும் ஈடுபட்டுவருகின்றன.
மகாயுத்தி கூட்டணிக்காக நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். கடந்த 8ஆம் தேதி மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் தூலே மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், காங்கிரஸ் ஓபிசி சாதி மக்களை பிளவுபடுத்தி ஆட்சிக்கு வர நினைக்கிறது என கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று (நவம்பர் 11) மகாயுத்தி கூட்டணியின் பிரச்சாரத்தைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் ” மகாராஷ்டிராவில், மகா விகாஸ் அகாதி கூட்டணி மக்களின் அன்றாடப் பிரச்சனைகளான – விவசாயிகள் மற்றும் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களிடையே நிலவும் பாதுகாப்பின்மை, இளைஞர்களுக்கு வேலை இல்லாமை, வறட்சி போன்றவற்றை முன்வைத்துத் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறது.
அது மட்டும் இல்லாமல், தண்ணீர் பற்றாக்குறை, SC, ST மற்றும் OBC சாதியினருக்கு போதிய சமூக நீதி, பெரும் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் மகாராஷ்டிராவுக்கு எதிரான பாகுபாடு குறித்து பிரச்சாரம் செய்து வருகிறது.
ஆனால், பாஜக தலைமையிலான மகாயுத்தி கூட்டணியின் பிரச்சாரத்தின் குறிக்கோள் ஒன்றே ஒன்று தான். அது மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பது மற்றும் மாநிலத்தின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பது.
அவர்களது இந்த பிரச்சாரம் வெறுப்பு நிறைந்த ஒன்றாக உள்ளது. மேலும், சமூகத்தில் விஷத்தைப் பரப்பி வருகிறது. ஆனால், இதனை மகாராஷ்டிரா மக்கள் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் முறியடிப்பார்கள்” என்று ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக மாநில அவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே நேற்று (நவம்பர் 10) மும்பையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
‘மகாராஷ்டிர நாமா’ என்று பெயரிடப்பட்டுள்ள அதில் “‘மகாலட்சுமி’ என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மேலும் அவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கான 50% வரம்பு நீக்கப்படும். மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுகாதாரக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இதில் இலவச மருந்துகளும் அடங்கும்.
மூன்று லட்சம் வரை விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். மேலும், கடன் தவணைகளைச் சரியாகக் கட்டிவரும் விவசாயிகளுக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்படும். வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மனுத் தாக்கல்!
2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்… 3.5 லட்சம் குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த உன்னத தாய்!
பாஜகவுடன் கூட்டணியா? : அதிமுக நிலைப்பாட்டை உறுதி செய்த ஜெயக்குமார்