மகாராஷ்டிரா தேர்தல் : பிரச்சாரத்தில் சாதி பெயர்களை பட்டியலிட்ட மோடி

Published On:

| By Minnambalam Login1

maharashtra modi campaign

 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ‘மகாயுதி’ கூட்டணிக்கு ஆதரவாகப் பிரதமர் நரேந்திர மோடி,இன்று(நவம்பர் 8) தொடங்கி ஒரு வாரக் காலத்தில் 9 பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றப் போவதாக பாஜக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ” மகாராஷ்டிராவில் உள்ள என் குடும்ப உறுப்பினர்கள், சட்டசபைத் தேர்தலில் என்டிஏ வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியை உறுதி செய்யத் தீர்மானித்துள்ளனர்.

இந்த உற்சாகமான சூழலில், நாளை நண்பகல் 12 மணிக்கு தூலேயிலும், பின்னர் பிற்பகல் 2 மணிக்கு நாசிக்கிலும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களின் ஆசிகளைப் பெறுவேன்.” என்று நேற்று(நவம்பர் 7) பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 8) மதியம் 12 மணி அளவில் மகாராஷ்டிராவின் துலே மாவட்ட பிரச்சாரக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டார்.

பாரத் மாதா கி என்று தனது உரையைத் தொடங்கிய அவர் “மகாராஷ்டிரா மக்களிடம் நான் எப்போது என்ன கேட்டாலும், அவர்கள் எனக்கு அவர்களது முழு ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார்கள்.

நான் இதற்கு முன்  2014 ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜகவிற்காக ஓட்டு கேட்க தூலேக்கு ஒருமுறை வந்தேன்.  அப்போது பாஜகவை வெற்றியடைய வைத்தீர்கள். இந்த முறையும் நான் தூலேவில் இருந்து எனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன்.” என்றார்.

மேலும் அவர் ” வருகிற ஐந்தாண்டுகளில் மகாராஷ்டிராவின் வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொட இருக்கிறது. அதை ‘மகாயுதி’ கூட்டணி அரசால் தான் சாத்திய படுத்த முடியும்.

ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாதி பிரேக் இல்லாத வண்டியைப் போல் உள்ளது. அந்த கூட்டணியில் உள்ள எல்லோரும் ஓட்டுநர் சீட்டுக்காக அடித்துக்கொள்கிறார்கள்.

மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தற்போது  மகாராஷ்டிராவில் செயல்பாட்டில் உள்ள ‘லட்கி பஹின்’ திட்டத்தை ரத்து செய்துவிடுவார்கள். மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிராவில் சாதி பிரச்சினையைத் தூண்ட நினைக்கிறது, ரத்து செய்யப்பட்ட அரசியலமைப்பு பிரிவு 370ஐ திரும்பக் கொண்டுவர நினைக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து மதியம் 3 மணியளவில் நாசிக்கில் உரையாற்றிய அவர் ” தற்போதைய இந்திய அரசு ஏழைகளுக்காகப் பாடுபடுவதால்தான், இந்தியா வளர்ச்சியடைந்து வருவது மட்டுமல்லாமல், புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

காங்கிரஸ் கட்சிதான் கரிபி ஹடாவோ( ஏழ்மையை ஒழிப்போம்) என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்களது ஆட்சியில் தான் ஏழை மக்கள் உணவு, உடை மற்றும் வீடுகளுக்காக கஷ்டப்பட்டார்கள்.

ஆனால் இந்த நிலைமை மாறியுள்ளது. கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து வெளியே வந்துள்ளார்கள்.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கஜானா காலியாகியுள்ளது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் சரியாகக் கிடைப்பதில்லை. இதனைச் சமாளிக்க, வரியை உயர்த்தி மக்களைக் கஷ்டத்திற்கு ஆளாக்குகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி மக்களைச் சாதிய ரீதியாகப் பிளவு படுத்த நினைக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள குன்பி, மாலி உள்ளிட்ட ஓபிசி சாதிகளுக்கு இடையே சண்டைகளை உருவாக்கி, ஜெயிக்க நினைக்கிறது. ஜவஹர்லால் நேரு ஓபிசி மக்களை ஒன்று சேர விடாமல் தடுத்தார்.

அவர்கள் ஓபிசிகளின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சுகிறார்கள். இன்று ஓபிசி மக்களின் ஆசியால் தான், ஒபிசி சாதியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக மூன்றாவது முறை தேர்வாகியுள்ளார். இதனைக் காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை.

அதனால் தான் நான் சொல்கிறேன் ” வலிமைக்கான வழி ஒற்றுமை” என்று மோடி கூறினார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

போதைப்பொருள் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச்சு : ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

சபரிமலைக்கு செல்ல இது அவசியம்… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: சட்டமன்றத்தில் கைகலப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share