”எல்லைப் பிரச்சினையில் கர்நாடகாவின் பெலகாவி பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்” என்று மகாராஷ்டிரா சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
எல்லைப் பிரச்சினை
கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினையானது, கடந்த 1960 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்தே நீடித்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட மகாராஷ்டிரா எல்லையோர மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் எல்லையோரத்தில் உள்ள 865 கிராமங்களை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என அம்மாநிலத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இந்த எல்லைப் பிரச்சனை வெடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அமித் ஷா ஆலோசனை!
மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி உள்ளது. இருப்பினும் எல்லை பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் கடும் போக்கை வெளிப்படுத்தி வருகின்றன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு மாநில முதல்வர்களையும் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கினார்.
இந்த விவகாரத்தில் அமித் ஷா தலையிட்டதால் இனி அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், கர்நாடக முதல்வர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, எல்லைப் பிரச்சினை விவகாரத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை தீர்மானமாக நிறைவேற்றினார். அத்துடன், ‘பெலகாலியில் இருந்து ஓர் அங்குல இடத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு மகாராஷ்டிர அரசும் பதிலடி கொடுத்தது. எல்லைப் பிரச்சினையில் கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசுவதைத் தொடர்ந்தால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் வழங்க மாட்டோம் என மிரட்டல் விடுத்தது.
மேலும், கர்நாடகம் நிறைவேற்றியதைப் போன்று மகாராஷ்டிரமும் 10 மடங்கு அதிக பலனளிக்கும் வகையில் விரிவான தீர்மானம் கொண்டுவரும் எனப் பதிலளித்தது.
உத்தவ் தாக்கரே பேச்சு
தற்போது, இந்த விவகாரத்தில் சிவசேனா தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே பேசியிருப்பது மீண்டும் பிரச்சனையை பூதாகரமாக்கி இருக்கிறது.
இன்று (டிசம்பர் 26) நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய உத்தவ் தாக்கரே, ”எல்லை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, மற்றொரு நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
அதாவது, பெலகாவி உள்ளிட்ட கர்நாடகாவின் சர்ச்சைக்குரிய பகுதிகளை மத்திய அரசு, யூனியன் பிரதேசமாக பிரகடனம் செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் இதையும் இணைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
”உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, அந்த பகுதிகளை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்” என உத்தவ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவேந்திர பட்னாவிஸ் பதில்!
இதற்குப் பதிலளித்த மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர், தேவேந்திர பட்னாவிஸ், ”எல்லைப் பிரச்சனையில் மாநில அரசு நாளை (டிசம்பர் 27) ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறது. எல்லைப் பிரச்சினையின் ஒவ்வொரு அங்குலத்திற்காக நாமும் போராடுவோம்.
கர்நாடகாவில் உள்ள மராத்தி மொழி பேசும் மக்களுக்கு நியாயம் கிடைக்க தேவையான அனைத்தையும் செய்வோம், அது மத்திய அரசு அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு முன்பாக இருந்தாலும் சரி” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே மற்றும் தேவேந்திர பட்னாவிஸின் இந்தப் பேச்சால், கர்நாடகாவுக்கு மட்டுமல்லாது, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
கோயில் நிலம் குத்தகை காலம்: 5 ஆண்டுகளாக உயர்வு!
மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை: ராமதாஸ்