எல்லைப் பிரச்சினையில் மகாராஷ்டிர அரசும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஷம்புராஜ் தேசாய் தெரிவித்துள்ளார்.
மராட்டியம்- கர்நாடகம் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. தற்போது கர்நாடகத்துடன் இணைக்கப்பட்ட பெலகாலியை, மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட இருமாநில முதல்வர்களையும் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி டெல்லிக்கு வரவழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தியதுடன், அறிவுரையும் வழங்கினார்.
இருமாநில எல்லை விஷயத்தில் அமித்ஷா தலையிட்டதால், அமைதி நிலவும் என்று எதிர்பார்த்த வேளையில், மீண்டும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடக சட்டசபையில் எல்லைப் பிரச்சினை மீதான விவாதத்தின்போது, எல்லைப் பிரச்சினையில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை இருஅவைகளில் தீர்மானமாக நிறைவேற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை பரிந்துரை செய்ததுடன், ’பெலகாவியில் இருந்து ஒரு அங்குல இடத்தைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதற்கு மகாராஷ்டிரா, பதிலடி கொடுத்தது. எல்லைப் பிரச்சினையில் கர்நாடக முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசுவதை தொடர்ந்தால், மராட்டிய அணைகளில் இருந்து தண்ணீர் வழங்க மாட்டோம் என்று மராட்டிய அமைச்சர் சம்புராஜ் தேசாய் மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில் ’எல்லைப் பிரச்சினை: கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி’ என்ற பெயரில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், இன்று (டிசம்பர் 23) நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா அமைச்சர் ஷம்புராஜ் தேசாய், “மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைப் பிரச்சினையில் கர்நாடகா நிறைவேற்றியதைவிட 10 மடங்கு அதிக பலனளிக்கும் வகையில் மாநில அரசு விரிவான தீர்மானம் கொண்டு வரும்.
அமித் ஷாவுடன் இரு மாநில முதல்வர்கள் சந்தித்த பிறகும், கர்நாடக முதல்வர் இந்த விஷயத்தில் முடிவெடுப்பது என்பது அமித் ஷாவை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
ஜெ.பிரகாஷ்
சென்னையில் உறைய வைக்கும் பனி: வாகன ஓட்டிகள் அவதி!
விஞ்ஞானி விருது: 10 லட்சம் நட்ட ஈடு தர உத்தரவு!