மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் வேட்புமனு வாபஸ் பெறும் நாள் நேற்றுடன்(நவம்பர் 4) முடிவடைந்த நிலையில், இந்த தேர்தலில் மொத்தம் 4,140 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. இதில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியும் மோதுகின்றன.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்சிகள் இரண்டாகப் பிரிந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது என்பதால், எந்த தொகுதியில் யார் ஜெயிப்பார்கள் என்று மொத்த இந்தியாவே கவனித்து வருகிறது.
இந்த நிலையில்தான், மொத்தம் 7,078 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்கள் என்றும், அதில் 2938 வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் செய்ததால், தற்போது 4,140 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது மகாராஷ்டிராவின் கடந்த சட்டமன்ற தேர்தலை விட 28 சதவீதம் அதிகம். கடந்த தேர்தலில் 3239 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.
மேலும் மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 420 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். புனேவில் உள்ள 21 தொகுதிகளில் 303 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதற்கிடையில் 87 தொகுதிகளில் 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரே நேரத்தில் 2 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேவைப்படும் என்று மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மஜல்கான் தொகுதியில் 34 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக ஷஹாதா தொகுதியில் 3 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃப்லிண்டாஃப் பற்றிய ஆவணப் படம்!
நெல்லையில் பயங்கரம் : பட்டியலின சிறுவன் மீது கொடூர தாக்குதல்… 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இந்து கோவிலை தாக்கிய கும்பலில் இருந்த கனடா போலீஸ்… காட்டிக் கொடுத்த வீடியோ!