மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த ஹரியானா தேர்தலுக்கு பிறகு இந்தியாவே இந்த தேர்தலைத்தான் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் ஷிண்டேவின் சிவ சேனா – பாஜக கூட்டணி, உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி என இரு அணிகளுக்கு இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.
தற்போது மகாராஷ்டிராவை ஷிண்டேவின் சிவசேனா – பாஜக- அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான ‘மகாயுதி’ கூட்டணி தான் ஆள்கிறது.
முதலமைச்சராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர்களாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸும், அஜித் பவாரும் உள்ளார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என்று ‘மகாயுதி’ தலைவர்கள் சென்ற வாரம் தெரிவித்திருந்தார்கள்.
இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி டெல்லிக்கு சென்று அமித் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு அக்டோபர் 19 அதிகாலை வரை நீடித்தது.
இந்த நிலையில்தான் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், 266 தொகுதிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், மீதம் உள்ள 20 தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது என்று தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே, பாஜக 150 – 160 தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவ சேனா 80 – 85 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 50 – 60 தொகுதிளிலும் நிற்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து டெல்லியில் கடந்த அக்டோபர் 19 அன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் “ தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றது. விரைவில் இறுதி செய்யப்படும். 25 – 30 தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்பது பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது விரைவில் சரி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், யார் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என்ற கேள்விக்கு “ நாங்கள் கூட்டாக உழைத்து வருகிறோம். மகாயுதி கூட்டணி நிச்சயமாக திரும்ப ஆட்சிக்கு வரும். மாநிலத்தின் வளர்ச்சிதான் முக்கியம்” என்று பதிலளித்தார்.
இதற்கிடையில், அக்டோபர் 18-ஆம் தேதி, சிவசேனா எம்எல்ஏ திலிப் லாந்தே , ஏக்நாத் ஷிண்டே தான் அடுத்த முதல்வர் என்று கூறியிருந்து இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் பாஜக 99 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்டோபர் 20-ஆம் தேதி அறிவித்தது. இதில் 71 மகாராஷ்டிரா சிட்டிங் எம்எல்ஏ-களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த பட்டியலில் தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.
இது இப்படி இருக்க எதிர்கட்சி கூட்டணியான’ மகா விகாஸ் அகாதி எனப்படும் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளன.
இவர்களுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு தலா 100 தொகுதிகள், மீதம் உள்ள 88 தொகுதிகள் தேசியவாத காங்கிரஸ்க்கு என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், இதை ஏற்காத மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் தங்கள் கட்சிக்கு 125 தொகுதிகள் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த எம்பியும், சிவ சேனாவின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவுத், “நம்மிடம் நேரம் குறைவாக உள்ளது. தொகுதி பங்கீடு குறித்தான முடிவுகள் விரைவாக இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், மாநில தலைவர்கள் முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அவர்களுக்கு டெல்லியின் தயவு தேவைப்படுகிறது” என்று நானா படோலை மறைமுகமாக சாடியிருந்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவாரை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தான் இன்று (அக்டோபர் 21) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவருமான விஜய் வடேட்டிவார் “இன்னும் 17 தொகுதிகள் குறித்துதான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. நாளை மாலைக்குள் அவை இறுதி செய்யப்படும் “என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், மகாராஷ்டிரா தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, விசிகவும் ஆர்ஜேடியும் தலா 10 தொகுதிகளில் போட்டியிட போகிறது என்று ஔரங்காபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவன் அறிவித்தார்.
“மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பத்து தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி பத்து தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏனைய மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம்” என்று அறிவித்துள்ளார் திருமா.
திருமாவளவனின் இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தேர்தல் முடிவுகளில் மிகச் சொற்ப எண்ணிக்கையில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.
அதற்குக் கார்ணம் ஆம் ஆத்மி, பி. எஸ்.பி. போன்ற கட்சிகள் தனியாக நின்றதுதான். இந்த நிலையில் மகாராஷ்டிராவிலும் விசிக, ஆர்.ஜே.டி. போன்ற கட்சிகள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் சொற்ப ஓட்டுகளைப் பெற்றால் கூட இந்தியா கூட்டணிக்கான ஓட்டுகளைத்தானே அவர்கள் பிரிப்பார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு முடிந்த பின்னர், பிரச்சாரக் களம் மகாராஷ்டிரத்தில் சூடுபிடிக்கும்!
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கலான் ஓடிடி ரிலீஸ்… க்ரீன் சிக்னல் கொடுத்த கோர்ட்!
கவரப்பேட்டை ரயில் விபத்து சதியா?: க்யூ பிரிவு போலீசார் சொல்வது என்ன?