மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்களான அஜித் பவாரும், தேவேந்திர பட்னாவிஸும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டில்லியில் நேற்று(அக்டோபர் 18) இரவு சந்தித்தனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளைக் கடந்த 15ஆம் தேதி அறிவித்தது. அதன்படி 288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 20ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடுகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று ‘மஹாயுதி’ கூட்டணி தலைவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தான் மாகாராஷ்டிரா ஆளுங்கூட்டணியான ‘மஹாயுதி’ யில் உள்ள முதல்வரும் சிவ சேனா(ஷிண்டே) பிரிவின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார் (தேசிய காங்கிரஸ் கட்சி-அஜித் பவார்) மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ்(பாஜக) ஆகியோர் நேற்று(அக்டோபர் 18) டெல்லிக்கு சென்றனர்.
அங்குச் சென்ற அவர்கள் வரவிருக்கும் மகாராஷ்டிரா தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியுள்ளனர். இதற்கிடையில் மகாராஷ்டிரா பாஜக 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டது என்ற தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி கூட்டணியான ‘மகா விகாஸ் அகாதி’யில் தொகுதிப் பங்கீடு குறித்தபேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி(ஷரத் பவார்), சிவ சேனா(உதவ் தாக்கரே) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் , காங்கிரஸ் மற்றும் சிவ சேனா(உத்தவ் தாக்கரே) கட்சிகளுக்கு தலா 100 தொகுதிகள் எனவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு(ஷரத் பவார்) 88 தொகுதிகள் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் தங்கள் கட்சிக்கு 125 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணியில் பிரச்சினை எழுந்துள்ளது.
மேலும் இனிமேல் நானா படேலிடம் சிவ சேனா(உத்தவ் தாக்கரே) பேச்சுவார்த்தை நடத்தாது என்று அக்கட்சித் தலைவர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையைச் சரி செய்ய மகாராஷ்டிரா தேர்தலுக்கான பொறுப்பாளரான காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மகாராஷ்டிரா செல்லவிருக்கிறார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரம்யா பாண்டியனுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?
வங்க கடலில் தோன்றிய நீல நிற அலைகள் : ஏன்… என்னாச்சு?
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… பொதுமக்கள் கவலை!