மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 20) காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், 11 மணி வரை 18% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணியான மகா விகாஸ் அகாதி இடையே கடும் போட்டியானது நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 இடங்கள், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களில் போட்டியிடுகிறது.
மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 95, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களில் போட்டியிடுகின்றன. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப் பதிவுக்காக 1 கோடிக்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், இன்று காலையிலேயே மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜ் பவனில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
துணை முதல்வர் அஜித் பவார் பாராமத்தியில், சச்சின் டெண்டுல்கர் மும்பையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பக்வத் நாக்பூரிலும் வாக்களித்தனர். இதற்கிடையில், மக்கள் அதிகளவில் வந்து வாக்களிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, 18.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தியேட்டரில் யூடியூப் ரிவ்யூவுக்கு தடை… தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!