மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸுடன், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் நாளை (டிசம்பர் 5) மாலை பதவியேற்க உள்ளனர்.
சமீபத்தில் முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 132 இடங்களில் வெற்றிபெற்றது.
இந்தநிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. ஏற்கனவே முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தனக்கு மீண்டும் முதல்வர் பதவி கேட்டு பாஜகவிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவோ, ஃபட்னாவிஸை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று முனைப்பு காட்டியது.
இந்நிலையில் மும்பை விதான் பவனில் பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மையக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்காக தேவேந்திர ஃபட்னாவிஸ் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச்சூழலில் இன்று மதியம் மாகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (டிசம்பர் 5) ஆட்சி அமைக்குமாறு தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு அழைப்பு விடுத்தார்.
பதவியேற்பு விழா நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ஃபட்னாவிஸுடன் துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்க உள்ளனர்.
ஆளுநர் சந்திப்பிற்கு பின் ராஜ் பவனில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், ”ஆட்சி அமைக்க தேவையான, அனைத்து பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் தான் சமர்ப்பித்துள்ளோம்.
முதல்வர் பதவி என்பது ஒரு டெக்னிக்கல் ஏற்பாடு. நாங்கள் மூவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.
நானும் இரண்டு துணை முதல்வர்களும் நாளை பதவியேற்போம். எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில் “இரண்டரை ஆண்டுகளுக்கு முன் என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆதரவு தெரிவித்தார். இன்று நான் அவர் முதல்வராவதற்கு ஆதரவு அளித்துள்ளேன். மகாராஷ்டிரா மக்களுக்காக உழைப்பதுதான் எங்களது (சிவ சேனா) ஒரே குறிக்கோள்” என்று தெரிவித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!