மகாராஷ்டிராவில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் லட்கே காலமானதால் அந்தத் தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்தன. தற்போது ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராய் இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே ஆதரவைப் பெற்றவர் அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏவான ரமேஷ் லட்கே. இவர், கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
உட்கட்சி பிரச்சினை
மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பிரச்சினையால் சிவசேனாவும், அந்தக் கட்சியின் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டு, இந்த இடைத்தேர்தலுக்கு புதிய கட்சியையும், புதிய சின்னத்தையும் அளிக்கும்படி, அவர்கள் இருவரையும் (உத்தவ் மற்றும் ஏக்நாத்) தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரும், ஏக்நாத் சிண்டே அணிக்கு, பாலாசாஹே பஞ்சி சிவசேனா என்ற பெயரும் ஒதுக்கப்பட்டது. அதுபோல் இரண்டு கட்சிகளுக்கும் வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச்சுடர் சின்னமும், ஏக்நாத் அணிக்கு இரட்டைவாள் மற்றும் கேடயம் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்தேரி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிடுகிறார். இதேபோல முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பாஜக வேட்பாளராக முர்ஜி படேல் நிறுத்தப்பட்டிருந்தார். அதேசமயத்தில், உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கேவுக்கு, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆதரவு தெரிவித்தார்.
மேலும், அவர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜகவுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், “ருதுஜா போட்டியிடும் அந்தேரி கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடக் கூடாது. அதுவே மறைந்த ரமேஷ் லட்கேவுக்கு அஞ்சலி செலுத்துவதாக இருக்கும்.
அதோடு வேட்பாளரை நிறுத்தாமல் இருப்பதுதான் நமது மகாராஷ்டிரா கலாசாரத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். அவரின் மனைவி எம்.எல்.ஏவாக மாறினால் ரமேஷின் ஆத்மா சாந்தியடையும்” என அதில் தெரிவித்திருந்தார். அதுபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பாஜக தனது வேட்பாளரைத் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர், `மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், மும்பை மாநகராட்சி மற்றும் சட்டமன்றத்தில் ஆற்றிய சேவையை கவனத்தில்கொள்ள வேண்டும். அதோடு எம்.எல்.ஏ பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கிறது.
எனவே, ருதுஜாவை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்த சரத் பவார்,பாஜக தலைவர் கோபிநாத் முண்டே இறந்தபோது அவரின் தொகுதியில் தாம் வேட்பாளரை நிறுத்தவில்லை” என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
, ’இந்த விவகாரத்தில் தான் தனித்து முடிவு எடுக்க முடியாது என்றும், கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார். அதுபோல், ருதுஜாவை எதிர்த்து களமிறக்கப்பட்ட முர்ஜி பட்டேலும், ”கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் போட்டியிலிருந்து விலகத் தயார்” எனவும் தெரிவித்திருந்தார்.
வாபஸ் காரணம் ஏன்?
இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று பாஜக தனது வேட்பாளரைத் திரும்ப பெற்றிருக்கிறது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசிநாளான நேற்று (அக்டோபர் 17) பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் முர்ஜி படேல் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ருதுஜா போட்டியின்றி அந்தத் தொகுதியிலிருந்து தேர்வாகவுள்ளார்.
தனது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலில் இருந்து பாஜக வேட்பாளரை வாபஸ் பெறச் செய்ததற்கு மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு ராஜ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜக கூட்டணி போட்டியிட்டு தோல்வி அடைந்துவிட்டால் அது வரும் மாநகராட்சித் தேர்தலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்தே தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, உத்தவ் தாக்கரே அணியின் புதிய கட்சி மற்றும் சின்னமும் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடும் என்பதாலும் பாஜக கூட்டணி இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, ருதுஜாவை வேட்பாளராக நிறுத்தவிடாமல் தடுக்க பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேவும் முயன்றதாகவும், அதற்காக, ருதுஜாவின் மாநகராட்சி ஊழியர் வேலைக்கான ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஜெ.பிரகாஷ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!
ஆறுமுகசாமி ஆணையம் கடந்து வந்த பாதை!