magalir urimai thogai discussion

மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் எண்ணிக்கை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

அரசியல்

மகளிர் உரிமைத் தொகை பெற 9 லட்சம் பேர் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்றைய (அக்டோபர் 10) தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகளிர் உரிமைத் தொகை விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது, “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதி 28 மாதங்கள் கழித்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் வலியுறுத்திய பின் செயலாக்கத்திற்கு வந்துள்ளது.

அதில் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் குடும்பத் தலைவிகள் ஒரு கையில் செல்போன், ஒரு கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு ‘எங்களுக்கு இன்னும் குறுந்தகவல்கள் வரவில்லை’ என்று சொல்கிறார்கள்.

ஆகவே குடும்ப தலைவிகளை தகுதியுள்ள குடும்ப தலைவிகளாக தேர்ந்தெடுக்கின்ற தரவுகளை ஒரு செய்தி குறிப்பாக அறிகிறேன். 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் அதில், ஒரு கோடி மனுக்கள் தகுதியுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 59 லட்சம் மனுக்கள் அரசால் தகுதியில்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதற்கு கார், 5 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலம் உள்ளிட்டவை வைத்திருப்பதாகவும் தரவுகள் வகுக்கப்பட்டிருக்கிறது. எதன் அடிப்படையில் இந்த தரவுகளை அரசு வகுத்தது என்று தெரியவில்லை.

முதலமைச்சர் இதனை அறிவிக்கிற போது சாமானிய மக்கள், ஏழை எளிய மக்களுக்கு உரிமைத்தொகையை வழங்குவேன் என்று சொன்னார். ஆனால் நடைமுறையில் வசதி படைத்த குடும்ப தலைவிகள் பெற்றிருப்பதாகவும், ஏழை எளிய சாமானிய குடும்பத் தலைவிகள் விடுபட்டிருப்பதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டார்.

“பொத்தாம் பொதுவாக அதை ஒரு குற்றச்சாட்டாக சொல்ல வேண்டியது இல்லை. 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுத்துள்ளோம். எந்த பத்திரிக்கையிலோ, எந்த ஊடகத்திலோ ஒரு பாதிக்கப்பட்ட நபர் கூட நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு தராமல் என்னை விட வசதியானவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்று சொல்லவில்லை.

இந்தியாவில் அல்ல உலகத்திலேயே 1 கோடியே 6 லட்சம் 50 ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து எந்த பத்திரிக்கையிலும், ஊடகத்திலும் ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல் வெளிப்படைத் தன்மையாக இருக்கிறது. பொத்தாம் பொதுவாக ஒருவர் செல்போனை கையில் வைத்துக் கொண்டு சொன்னார் என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு நியாயமா என்று சொல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், “1 கோடி பேருக்கு குறையாமல் மாதம் ஆயிரம் கொடுப்போம் என்று தான் சொன்னோம். இப்போது 1 கோடி தாண்டி 1 கோடியே 6 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஆனால் இப்போதும் மேல்முறையீடு செய்யலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளோம். அதன் அடிப்படையில் இதுவரை 9 லட்சம் பேர் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையைத் தாண்டினாலும் நாங்கள் பரிசீலிப்போம்.

மேல்முறையீடு செய்பவர்கள் உண்மையான மனுதாரர்களாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கொடுக்கப்படும். உங்களிடத்தில் அப்படி யாராவது எனக்கு வரவேண்டிய தொகை வரவில்லை என்று சொல்லி வந்தால் அதையும் எங்களிடத்தில் தாருங்கள். அவர்கள் அதிமுகவா அல்லது வேறு எந்த கட்சியா என்று நாங்கள் பார்க்க மாட்டோம். எந்த கட்சியானாலும் நியாயமானவர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் உறுதியாக வழங்கப்படும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், “முதலமைச்சர் 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு என்று அறிவித்தது உண்மை. ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்குவோம் என்று தான் மக்கள் புரிந்து கொண்டார்கள். நாங்களும் அப்படி தான் புரிந்து கொண்டுள்ளோம்” என்று பேசிக் கொண்டிருந்த போதே மீண்டும் சபாநாயகர் குறுக்கிட்டு பேசினார்.

“உதயகுமாரின் வீட்டம்மாவிற்கும் ரூ.1000 வேண்டுமா, அப்பாவு வீட்டம்மாவிற்கும் ரூ.1000 வேண்டுமா?. இதையெல்லாம் மனசாட்சியைத் தொட்டு நீங்கள் நியாயமாக சாதி, மதம், இனம், ஆளுங்கட்சி என்று பார்க்காமல் குற்றச்சாட்டுகள் உங்களிடம் வந்தால் சுட்டிக்காட்டி சாமானிய மக்களுக்கு கிடைக்க உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், “பொங்கல் பரிசை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த போது, 2, கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சபாநாயகர், “நீங்கள் அரசின் கவனத்தை ஈர்த்து அமர வேண்டியது தான்” என்றார்.

இதனையடுத்து முதல்வர், “அவர் சொல்வது ஆண்டிற்கு ஒரு முறை. இது மாதம் மாதம். அதனால் தான் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் கொடுக்கிறோம் என்று முடிவெடுத்துள்ளோம். பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் கொடுப்போம். அதையும் இதையும் ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் காலதாமதத்தை பற்றி குறிப்பிட்டு பேசுகிறீர்கள். நாங்கள் வந்த உடன் நிதிநிலைமை சரியாக இருந்தால் அடுத்த நிமிஷமே கொடுத்திருப்போம்.

நிதி நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது அதுவும் உங்களுக்கு தெரியும். அதன்பிறகு யார் தகுதியானவர்கள் என்று தேர்ந்தெடுத்து இவ்வளவு பணிகளையும் செய்து சொன்ன தேதியில் செப்டம்பர் 15 ஆம் தேதி கொடுத்திருக்கிறோம்” என்றார்.

பின்னர் சபாநாயகர், ஆர்.பி.உதயகுமாரை ”அரசின் கவனத்தை ஈர்த்து அமருக” என்றார்.

இதனையடுத்து, “மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே அரசு இருக்கின்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது” என்றார்.

தொடர்ந்து முதல்வர், “விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த மனுக்களையும் நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை. அப்படி இருந்தாலும் சொல்லுங்கள். உடனடியாக கவனிக்கப்படும்” என்றார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவிரியாக ஓடும் கள்ளச்சாராயம் : கண்டுக்கொள்ளுமா காவல்துறை?

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இந்தியாவின் நகை வர்த்தகத்தில் கடும் பாதிப்பு!

அமர்த்தியா சென் மரண செய்தி… ’வதந்தி’ என உறுதி செய்த மகள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *