மதுரையில் சுற்றுலா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து தமிழகத்திற்கு வந்த ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்நாபசாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர்.
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இன்று (ஆகஸ்ட் 26) காலை 5.30 மணியளவில் பயணிகள் ரயில் பெட்டியை பூட்டிக் கொண்டு சிலிண்டர் பயன்படுத்தி சமைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 ஆண்கள், 3 பெண்கள் ஆகிய 9 பேர் மரணமடைந்துள்ளனர்.
பயணிகள் சட்ட விரோதமாக கேஸ் சிலிண்டர் கொண்டு வந்துள்ளனர். கேஸ் கசிவு காரணமாக தான் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் தகவலை அறிந்து கொள்ள உதவி எண்களையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொண்டு உயிரிழந்தவர்களின் விவரங்களை உறவினர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆளுநர் இரங்கல்
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று ராஜ் பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை அருகே ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை அறிந்து வேதனை அடைந்தேன்.
எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா