மதுரை சுங்கச்சாவடி முற்றுகை: ஆர்.பி.உதயகுமார் கைது…. எடப்பாடி கண்டனம்!

அரசியல்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்ததற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 10) கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் ஜூலை 9 முதல் உள்ளூர் பொதுமக்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்தநிலையில், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றக் கோரி பலமுறை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.

2024 ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (பக்கம் 27), டோல் கேட்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி மக்களுடன் இணைந்து கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்றும், மற்றும் உள்ளூர் மக்கள் வாகனங்களில் செல்லும்போது அவர்களுக்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவித்து போராடிய மதுரை புறநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளையும், பொதுமக்களையும் கைது செய்துள்ள திமுக அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கைதுசெய்துள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை உடனடியாக விடுவிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி தேர்தல்: 11 மணி நிலவரம்… 29.97% வாக்குப்பதிவு!

Share market: பங்குச்சந்தை சரிவு… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *