மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு திடீரென காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை கே,கே.நகர் பகுதியில் ஆர்ச் அருகே முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அருகருகே உள்ளன.
இருவரின் பிறந்தநாள், நினைவு தினத்தையொட்டி, கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவிப்பது வழக்கம். இதையொட்டி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கட்சிக் கொடி, தோரணங்கள் கட்டப்படும்.
இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) மாலை 5 மணிக்கு திடீரென எம்ஜிஆர் சிலையின் கழுத்தில் காவித் துண்டு அணிவிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவலறிந்த அண்ணாநகர் உதவி ஆணையர் சூரக்குமார், காவல் ஆய்வாளர் சாதுரமேஷ் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். எம்ஜிஆரின் சிலையில் கிடந்த காவித் துண்டை உடனே அப்புறப்படுத்தினர்.
இந்தத் துண்டு எம்ஜிஆர் சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டதா அல்லது கோயிலுக்கு சென்றவர்களின் வாகனங்களில் இருந்து எதிர்பாராதவிதமாக பறந்து விழுந்ததா அல்லது சமூக விரோதிகள் வீசிவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், அண்ணா நகர் போலீஸார் சிலையை சுற்றிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரிக்கின்றனர். திட்டமிட்டு, வேண்டுமென்றே யாரேனும் சிலைக்கு காவித் துண்டு அணிவித்து, சமூக விரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவம் அதிமுகவினருக்கு உடனே தெரியாத நிலையில், சமூக வலைதளம், ஊடகங்களில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று இரவு வரை அதிமுகவினரோ, அமமுகவினரோ காவல் துறையினரிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை என போலீஸார் கூறினர்.
-ராஜ்
“குழந்தைகள், முதியோர் தனிவரிசை பலன் தந்துள்ளது” – சபரிமலை தேவசம் போர்டு
இந்தியா வாங்கியிருக்கும் கடன் எவ்வளவு கோடி தெரியுமா?