மதுரையில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறும் அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது கொடியேற்றி துவக்கி வைத்துள்ளார்.
மதுரை ரிங்ரோடு அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தில் அதிமுக மாநாடு இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின் நடக்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால் மதுரை மாநகர் எங்கும் அதிமுக தொண்டர்களாகவே காட்சியளிக்கின்றனர்.
சுமார் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகாலை முதலே மாநாடு நடைபெறும் இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்த நிலையில் முதல் நிகழ்ச்சியாக தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே வேனில் திடலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி காலை 9 மணியளவில் 55 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார்.
அவர் கொடியேற்றும் போது வானிலிருந்து சுமார் 10 நிமிடங்கள் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கழகத்தின் 50வது ஆண்டு பொன்விழாவின் புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் பலரும் சென்று பார்வையிட்டனர்.
மாநாட்டு அரங்கில் காலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்பின்னர் மாலை 5 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரை நிகழ்த்த உள்ளார்.
இரவு 7. 30 மணிக்கு முன்பாக அனைத்து நிகழ்வுகளும் முடிந்து தொண்டர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்று வேளையும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திருநெல்வேலியில் அதிமுக 25வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரையில் கோலாகலமாக தொடங்கியுள்ள அதிமுக பொன்விழா மாநாடு அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொன்விழா மாநாட்டின் நேரலையைக் காண இந்த லிங்கை கிளிக் செய்து https://www.youtube.com/watch?v=XuqTKl4Ax3k நமது மின்னம்பலம் யூடியுப் தளத்தில் பார்க்கவும்.
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த சூப்பர் ஸ்டார்: சர்ச்சைக்கு சத்யராஜ் வைத்த முற்றுபுள்ளி!
வெங்காய விலை உயர்வு: 40 சதவிகிதம் ஏற்றுமதி வரி விதித்த மத்திய அரசு