டிஜிட்டல் திண்ணை: மதுரை சம்பவம்- ஸ்டாலின் ரியாக்‌ஷன் தாமதம்- திமுகவில் என்ன நடக்கிறது?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  வாட்ஸ் அப்  மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“நம் நாட்டுக்காக ஜம்மு காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் லட்சுமணனின் திருவுடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு  ஆகஸ்டு 13 பகல்  12  மணியளவில் கொண்டுவரப்பட்டது, விமான நிலையத்தில்  தியாகம் செய்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த ராணுவ, அரசு புரோட்டாகால்படி  அமைச்சர் பிடிஆர்,  கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு பதவியில் இருப்போர் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது பாஜகவினருக்கு அங்கே அஞ்சலி செலுத்த  ‘தகுதி’ இல்லை என புரோட்டாகால் அடிப்படையில் அமைச்சர் பி.டி.ஆர். பேசிய காரணத்தால்  சலசலப்பு எழுந்தது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பிடிஆரின் காரின் மீது பாஜகவினர் செருப்புகளை வீசி பாரத் மாதாகீ ஜே என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆரின் தேசியக் கொடி கட்டப்பட்ட காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசியது ஆகஸ்டு 13 பகல் 12 முதல் 12.15 மணி அளவில் நடந்த சம்பவம்.

தமிழ்நாட்டில் மற்ற எந்த அமைச்சர்களையும் விட பாஜகவினரை, மத்திய அரசை துல்லியமாக தாக்கி விமர்சனம் செய்து வருபவர் பிடிஆர். இந்த நிலையில் பாஜகவினரின் இந்த செருப்புத் தாக்குதலுக்கு எதிராக ஆகஸ்டு 14 பிற்பகல்தான் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து அறிக்கை வந்திருக்கிறது.

பாஜகவினர் செருப்பு வீசியதை விட, அதற்கு முதல்வர் ஸ்டாலினின் இந்த தாமதமான ரியாக்‌ஷன் தான் திமுகவினர் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.

மதுரைக்கு ராணுவ வீரர் உடல் வருகிறது என்றதுமே மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைச்சர்கள் மூர்த்தி, அமைச்சர்கள் பிடிஆர் ஆகிய இருவருக்கும் முறைப்படி தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.

முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் பிடிஆருக்கு தகவல் சென்றுள்ளது.  அமைச்சர் மூர்த்தி தன் மகனுக்கு ஆவணி மாதம் கல்யாணம் வைத்திருக்கிறார். வீட்டில் கல்யாணம் வைத்துக் கொண்டு துக்க நிகழ்வுக்கு செல்லக் கூடாது என்ற குடும்ப வழக்கத்தால் அமைச்சர் மூர்த்தி அஞ்சலி செலுத்த செல்லவில்லை.

அவர் சென்றிருந்தாலாவது குறைந்தது 100 தொண்டர்கள் அவரோடு வந்திருப்பார்கள் என்கிறார்கள் மதுரை திமுகவில். இந்த காரணத்தால் அமைச்சர் பிடிஆர்தான் அஞ்சலி செலுத்த சென்றார். 

மதுரையின் வழக்கமான கள அரசியல் பழகாதவர் பிடிஆர். பாரம்பரிய குடும்பம், திமுகவின் செல்வாக்கு ஆகியவைதான்  அவரது பலமே தவிர, கிரவுண்ட் செல்வாக்கு என்பது பிடிஆருக்கு கிடையாது.

மேலும் அவர் கட்சியினருடன் நெருங்கிப் பழகாதவர் என்பதால் விமான நிலையத்துக்கு திமுகவினர் பெரிதாக வரவில்லை. அதேநேரம் அண்ணாமலை ஆள் அம்பு சேனையோடு வந்தார். இந்த  பின்னணியில்தான் பிடிஆரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது போலீஸார், காரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியதால் பிடிஆரின் காரை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார் டிரைவர். ஒருவேளை அமைச்சர் மூர்த்தி வந்திருந்தால் இப்படி நடந்திருக்குமோ என்னவோ என்கிறார்கள் திமுக மதுரை நிர்வாகிகள்.

இந்த சம்பவம் நேற்று பகல் முதலே ஊடகங்களில் வெளிவந்துவிட்டன. உடனடியாக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பலர் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். கொஞ்ச நேரத்தில் நேற்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

பாஜகவின் தேசப் பற்று சாயம் வெளுத்துவிட்டதாக குறிப்பிட்ட துரைமுருகன், இந்த நிலையில் திமுகவினர் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.  திமுக பொதுச் செயலாளரின் இந்த கண்டன அறிக்கை கூட  ஆகஸ்டு 14 முரசொலியின் மூன்றாம் பக்கத்தில்தான் வெளியானது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும்  கண்டித்து முடித்துவிட்ட நிலையில்தான் இன்று (ஆகஸ்டு 14) பிற்பகல் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இருந்து  இதற்கு ரியாக்‌ஷன் வந்திருக்கிறது.

என்னதான் பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டன அறிக்கை வெளியிட்டாலும், தனது அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பு வகிக்கும் அமைச்சரான பிடிஆரின் காரில்  பாஜகவினரால் செருப்பு வீசப்பட்டதற்கு முதல்வரிடம் இருந்து இவ்வளவு தாமதமாக அறிக்கை வரும் என்று திமுகவினரே எதிர்பார்க்கவில்லை.

இன்று காலை வரை, ‘என்ன ஒரு நாள் ஆகியும் இன்னும் முதல்வர் ரியாக்ட் பண்ணவே இல்லையே?’  என்று சீனியர் அமைச்சர்கள் கூட பேசிக் கொண்டனர். முதல்வரின் சமூக தளப் பக்கத்தில் கூட ஓர் கண்டனக் குறிப்பு எழுதப்படவில்லை என்பதும் திமுக சீனியர் நிர்வாகிகளையும் அமைச்சர் பிடிஆரை சுற்றியிருந்தவர்களிடமும் விவாதப் பொருளாகவே ஆனது.

இதன் பிறகே முதல்வர் அறிக்கை வெளியிட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையையும்  குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார் முதல்வர். இந்த அறிக்கையில் எதிர்பார்த்த காரம் எதுவும் இல்லை என்பதே உடன்பிறப்புகளின் ரியாக்‌ஷன்.

மேலும் தமிழகத்தின் பல இடங்களில் பிடிஆர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்துக்கு எதிராக பெரிய அளவில் திமுகவினர் போராட்டம் நடத்தவில்லை. இது திமுக தொண்டர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது, சென்னையில் கமலாலயத்தை முற்றுகையிடவும் தயாராகிவிட்டார்கள் திமுகவினர். ஆனால் தலைமையிடம் இருந்து சிக்னல் தரப்படவில்லை என்கிறார்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் சிலரே” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

ஃபேஸ்புக் மெசஞ்சர் இதுபற்றி இன்னொரு முனையின் தகவலை டைப் செய்தது. “முதல்வர் இந்த விஷயத்தில் மிக நிதானமாக செயல்பட்டதாக அறிவாலய உயர் வட்டாரத்தில் கூறுகிறார்கள். முதல்வரும் நேற்று உடனே அதிர்வான வகையில் ரியாக்ட் செய்திருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும். திமுகவினர் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டும் என்றுதான் பாஜக எதிர்பார்த்தது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் ஆளும் திருணமூல் காங்கிரஸ் தொண்டர்களை இப்படி தூண்டித் தூண்டித்தான் பாஜக அங்கே வளர்ந்தது. கிட்டத்தட்ட அதே பாணி அரசியலைதான் இங்கே கையிலெடுக்கிறது பாஜக.

ஆனால் முதல்வர் உளவுத்துறை மூலம் இதை அறிந்து திமுகவினர் பாஜகவின் அடுத்த கட்ட திட்டத்துக்கு இரையாகிடாமல் தடுத்திருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து மேலும் சில சட்டம் ஒழுங்கு கெடும் சம்பவங்களை ஏற்படுத்தி, ராணுவ வீரருக்கு தாங்கள் செய்த அவமரியாதையை பாஜகவினர் மறைத்திருப்பார்கள். முதல்வர் உத்தரவுப்படி  திமுகவினர் அடக்கி வாசித்ததால்தான் பாஜகவை அதிமுகவே விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே இதில் முதல்வர் அலட்சியம் காட்டவில்லை, நிதானம் காட்டி பாஜகவை தனிமைப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் முதல்வரைச் சுற்றியிருப்பவர்கள்” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது மெசஞ்சர்.

அற்பத்தனத்தால் நேருவை மறைக்க முடியாது: காங்கிரஸ் கண்டனம்!

+1
0
+1
2
+1
1
+1
11
+1
1
+1
0
+1
1

1 thought on “டிஜிட்டல் திண்ணை: மதுரை சம்பவம்- ஸ்டாலின் ரியாக்‌ஷன் தாமதம்- திமுகவில் என்ன நடக்கிறது?

  1. தொண்டர்களை தூண்டி மோதவிட்டு அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கொண்டுவரதான் இந்த திட்டம். இது தமிழ்நாடு.யாரும் இந்த அரசியலை விரும்பமாட்டார்கள்.ஆகவேதான் பிஜேபி தலைமை பின்வாங்கியது.அவர்களுக்கு தெரியும் திமுக காரணை தூண்டிவிட்டால் மோடியை கூட செருப்பால் அடிக்க தயங்க மாட்டான் என்று.

Leave a Reply

Your email address will not be published.