மதுரை சம்பவம்: அமைச்சரிடம் மன்னிப்பு கோரிய பாஜக மாவட்டத் தலைவர்-  பாஜகவில் இருந்தும் விலகல்!

அரசியல்

 மதுரை மாநகரில் நேற்று (ஆகஸ்டு 13)  அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தில்  அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மன்னிப்பு கேட்டிருப்பதோடு பாஜக மாவட்ட தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அரசியல் அரங்கில் கடுமையான சர்ச்சைகள் எழுந்தது. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாஜகவை கடுமையாக கண்டித்தனர்.

ராணுவ வீரர் லட்சுமணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பிடி.ஆரிடம் பாஜகவினர் நடந்துகொண்டதற்காக ஆறு பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை   சந்தித்தார்  மதுரை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன். பிறகு செய்தியாளா்களிடம் பேசினார். 

“மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சா் வாகனத்தின் மீது காலணி வீசிய சம்பவம் வருத்தத்திற்குரியது. பாஜகவினா் காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல, அது பண்பாடற்ற அரசியல்.

அமைச்சா் தமிழில் கூறிய வாா்த்தைகளை பாஜகவினா் தவறாகப் புரிந்து கொண்டனா். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்தேன்.

அதோடு கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவின் மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை.

இனியும் பாஜகவில் தொடா்ந்து பயணிக்க இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்க இருக்கிறேன்” என்றாா் டாக்டர் சரவணன். 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் சரவணன் திடீரென பாஜகவுக்கு தாவினார்.

திமுக மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் அவர் பாஜகவுக்கு தாவி சில மணி நேரங்களில் எம்.எல்.ஏ. சீட்டும் பெற்றார், பின் மாவட்ட தலைவராகவும் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் ஏற்கனவே மதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தவர் ஆவார்.

வேந்தன்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.