ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்காலத் தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (மார்ச் 1) மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதன் அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்பிக்கப்பட்டு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், தனது பெயர் சேர்க்கப்பட்டதற்கும் தடை விதிக்க கோரி விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து விஜயபாஸ்கர் மீது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டினார்.
இறுதியில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்ட பத்திகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க நீதிபதி சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் ஆணையத்தின் அறிக்கையை பயன்படுத்தி விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், வழக்கு விசாராணையை மார்ச் 24ம் தேதி ஒத்திவைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
70வது பிறந்தநாள் : முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து!
சுற்றுலா, டேப்லெட்: ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!