மதுரை புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 6) புத்தகத் திருவிழா தொடங்கியது. விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்த புத்தக திருவிழாவுக்கு காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். அரசு நிகழ்ச்சி என்பதால் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின் பேரில் மாணவிகள் அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
புத்தக திருவிழாவின் முதல் நாளில் நேற்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், சாமி பாட்டும் போடப்பட்டுள்ளது.
“அங்கே இடி முழங்குது” என்ற பக்தி பாடலுக்கு ஒருவர் கருப்பசாமி வேடமிட்டு கையில் அறிவாளுடன் வருகிறார்.
இதைகண்ட மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த மாணவிகள் பலர் உணர்ச்சிவசப்பட்டு சாமி ஆடினர். அவர்களை சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பிடிக்க முடியாமல் திணறினர். சாமியாடிய சில மாணவிகள் மயக்கமடைந்து விழுந்த நிலையில் அவர்கள் மீது தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.
மறுபக்கம் மாணவர்கள் அங்கு ஒலிபரப்பப்பட்ட பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர்.
ஏற்கனவே சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் மாணவிகள் சாமியாடிய விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையில் மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறித்தியுள்ளார்.
இன்று (செப்டம்பர் 7) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரு பாட்டைக் கேட்டு மாணவிகள் சாமி ஆடுகிறார்களென்றால் அது நமது கல்வி முறையின் தோல்வியல்ல , நமது பண்பாட்டின் தோல்வி !
கல்வி என்பது வகுப்பறைகளில் மட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும்கூடப் புகட்டப்படுகிறது. அங்கெல்லாம் மூடத்தனம் என்னும் நச்சுப் புகையைப் பரப்பிக்கொண்டு வகுப்பறையில் மட்டும் அறிவியல் என்னும் ஆக்ஸிஜனை செலுத்தினால் நமது இளைய சமுதாயத்தைக் காப்பாற்றவே முடியாது!
பீகார் மாநில அரசு 1999 ஆம் ஆண்டிலும்; மகாராஷ்டிரா மாநில அரசு 2013 ஆம் ஆண்டிலும்; கர்நாடக மாநில அரசு 2017 ஆம் ஆண்டிலும் இயற்றியதுபோல மூடப் பழக்கங்களைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நிவின் பாலி மீதான பாலியல் புகார் : இயக்குநர்கள் சொன்ன தகவல்!
மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி… : குவியும் பக்தர்கள், களைகட்டிய விநாயகர் சதுர்த்தி!