மதுரைக்கு பத்தாயிரம் பட்டா… உதயநிதியின் பிரம்மாண்ட விழாவில் மூர்த்தியின் போராட்டம்!

Published On:

| By Aara

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 9) மதுரையில் பிரம்மாண்டமான அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொள்கிறார். இதற்காக மதுரையே விழாக் கோலம் பூண்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான் என பத்து சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

இந்த பத்து தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு தலா ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் என மாவட்டம் முழுதும் 10 ஆயிரம் வீட்டு மனைப் பட்டாக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால் வழங்கப்படும் என கடந்த ஆகஸ்டு மாதமே அறிவித்தார் அமைச்சர் மூர்த்தி.

10 ஆயிரம் வீட்டு மனைப் பட்டாக்கள் மட்டுமல்ல, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி வழங்குவது உள்ளிட்ட 22 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி.

முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வந்தால் எப்படி வரவேற்பு ஏற்பாடுகள் இருக்குமோ, அதேபோல அமைச்சர் உதயநிதிக்கான வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளன. விளம்பரங்கள் முழுதும், ‘இளைய தலைவர்’ என்றே அடைமொழியிட்டு உதயநிதி குறிப்பிடப்பட்டுள்ளார்.

Madurai gets ten thousand patta... Murthy's protest at Udayanidhi's grand function!

இவ்வளவு பிரம்மாண்டமாக இந்த விழாவை நடத்தும் அமைச்சர் மூர்த்தி தன் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் நேற்று வரை அதிகாரிகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து திமுக வட்டாரத்திலும் அதிகாரிகள் வட்டாரத்திலும் விசாரித்தபோது,

“மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் தலா ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதுதான் அமைச்சர் மூர்த்தியின் திட்டம். புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகாரிகள் பட்டா வழங்குவதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

ஆனால் மூர்த்தியின் மதுரை கிழக்கு தொகுதி மாநகர பகுதிக்குள் வருகிறது. இந்நிலையில் அவரது தொகுதிக்கு உட்பட்ட ( வார்டு எண் 28) உலகனேரி, உத்தங்குடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட இடம் என்பதால் பட்டா வழங்குவதற்கு பலத்த நிபந்தனைகளை விதித்தனர் அதிகாரிகள். இதேபோலத்தான் தளபதியின் மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட சீமான் நகர் பகுதியிலும் பட்டா வழங்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருபக்கம் பிரம்மாண்டமான விழா ஏற்பாடுகளில் கவனம் செலுத்திய அமைச்சர் மூர்த்தி, தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க முடியாமல் போய்விடுமோ என நேற்று மாலை வரை அதிகாரிகளோடு போராடியிருக்கிறார். மதுரை மாநகரத்துக்கு உட்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறதா என்பது விழாவுக்குப் பின்னர்தான் தெரியவரும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வேந்தன்

IND vs BAN: மீண்டும் வந்த பண்ட், கோலி… இந்திய அணி அறிவிப்பு!

தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel