மதுரை திமுகவில் உட்கட்சிப் பூசல்: மீண்டும் போட்டுடைத்த பிடிஆர்

அரசியல்

”நான் யாருக்கும் அடிமையாக இருக்கத் தேவையில்லை” என தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியிருப்பது மதுரை திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

”தனக்கு கட்சியில் பொறுப்பும் இல்லை; அந்தஸ்தும் இல்லை” என தமிழக நிதியமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த அக்டோபர் 6ம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் விரக்தியுடன் தெரிவித்திருந்தார்.

பிடிஆரின் இந்த பேட்டி, மதுரை திமுகவுக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

மதுரை திமுகவில் வணிகம் மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஓர் அணியாகவும், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் மதுரையில் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பனிப்போரே நடைபெற்று வருகிறது. அதற்கு மதுரையில் நடைபெறும் நிகழ்வுகளே உதாரணமாக இருக்கின்றன. குறிப்பாக, மதுரை மேயர் தேர்வு முதல் அவர்களுக்குள் கடும் மோதல் போக்கு நிலவி வருவதாக மதுரை திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

madurai dmk minister ptr speech

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தலில், கட்சியிலும் பதவியை வாங்கும் நோக்கில், மாநகர மாவட்டச் செயலாளராகும் முயற்சியில் இறங்கினார் அமைச்சர் பிடிஆர்.

மாவட்டச் செயலாளராக கோ.தளபதிதான் எனப் பேசப்பட்ட நிலையில் அவருக்கு எதிராக களமிறங்கினார் அமைச்சர் பிடிஆர். ஆனால், தலைமை அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.

பிறகு, மாவட்டச் செயலாளராக கோ.தளபதியே தேர்வு செய்யப்பட்டார். இந்த பின்னணியில்தான் அப்படியொரு பேட்டியை பிடிஆர் அளித்தார் என்று மின்னம்பலத்திலே முட்டி மோதியும் கிடைக்காத மாசெ பதவி: பிடிஆர் விரக்தி பின்னணி! என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம்.

இந்த நிலையில்தான் திமுக தலைவராக மீண்டும் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மதுரையில் இன்று (அக்டோபர் 13) நிதி அமைச்சர் பிடிஆர் தலைமையில், மதுரை மடீசியா அரங்கில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முழுவதுமாக நிதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர். கட்சி சார்பில் நடக்கக்கூடிய இந்நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி புறக்கணித்துள்ளார். மேலும், அமைச்சர்களும் மற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் புறக்கணித்துள்ளனர்.

இந்த விருந்து நிகழ்வில் பேசிய நிதி அமைச்சர் தியாகராஜன், “தலைவரின் பேச்சை மீறி சிலர் செய்நன்றி மறந்த நிலையில் உள்ளனர். தலைவருக்காக நடத்தப்படக்கூடிய இந்த நிகழ்ச்சியில் அவர்களும் புறக்கணித்து யாரும் வரக்கூடாது என மிரட்டல் விடுத்தது வேதனை அளிக்கிறது. அவர் சிறிய மனிதராக நடந்துகொள்ளக்கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

மதுரையில் என்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி வரும். நான் படித்தவன். உண்மையை மட்டும்தான் தலைவரிடம் பேசினேன். நான் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கிறேன். ஆனால் சிலர் பொருளாதாரத்தை மேலும் மேலும் அடைய பேராசைப்படுகின்றனர்.

நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை. என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும். திறமையற்றவர்களை திறமையானவர்களாக காட்ட முடியாது. ஆனால் சுயமரியாதை உள்ளவர்களை மாற்ற முடியாது.

சிலர் திமுக கட்சி பொறுப்பை தருவதாக கூறி எனது ஆதரவாளர்களை போனில் அழைத்துள்ளனர். ஆனால் என் ஆதரவாளர்கள் அதை மறுத்துவிட்டனர். இதேவழியில் செல்வோம்; சிறப்பாக முடியும்” எனப் பேசியிருக்கிறார்.

அவர், தனது ஆதங்கத்தை மாவட்டச் செயலாளருக்கு எதிராகப் பேசியிருப்பது மதுரை திமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

இப்படி பேசியதால் ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் : பி.சி.ஸ்ரீராம்

வளைகாப்பு அமைச்சர் என்பது பெருமை: பிடிஆர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *