சித்திரைத் திருவிழா… அக்னி நட்சத்திரம்…  தேர்தல் தேதிக்குள் இருக்கும் சுவாரஸ்யங்கள்!

அரசியல்

வருகிற மக்களவைத் தேர்தல் தேதி தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (மார்ச் 16) அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கும் தேர்தல் தமிழ்நாடு-புதுச்சேரியில் முதல் கட்டத்தில் நடக்கிறது.

தேர்தல் தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதும் அரசுத் தரப்பு உட்பட பல தரப்பினருக்கும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சுவாரஸ்ய காரணங்களும் இருக்கின்றன. கடந்த 2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இம்முறை ஒரு நாள் கழித்து ஏப்ரல் 19 நடைபெறுகிறது.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்குமான தேர்தல் முடிந்து, ஏப்ரல் 14 சித்திரைத் திருநாள், தமிழ் புத்தாண்டும் முடிந்து ரிலாக்சாக தேர்தல் வருகிறது.

அரசுத் தரப்புக்கு இன்னொரு வகையில் இந்தத் தேர்தல் தேதி நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
“ஏழு கட்டத் தேர்தல் மே மாதமெல்லாம் வட மாநிலங்களில் நடத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 லேயே முடிந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் மே 2 முதல் 28 வரை அக்னி நட்சத்திரம். கொடூர வெயில் கொளுத்தும். இதனால் மாநிலத்தின் பல இடங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். தேர்தல் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது ஆளுங்கட்சியான திமுகவுக்கு சிக்கலாகும்.

ஆனால், அந்த பிரச்சினை இப்போது இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு மாநில அரசு பரிந்துரைத்த மாதிரியே ஏப்ரல் மாதத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது ” என்கிறார்கள் ஆளுங்கட்சித் தரப்பில்.

கடந்த 2019 தேர்தல் தேதி மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த முறை அதுபோல ஏதும் இல்லை.

கடந்த 2019 ஏப்ரல் 18 தேர்தல் நடந்தது. அன்றுதான் மதுரையின் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான மீனாட்சியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. காலையில் மீனாட்சி கோயில் தேரோட்டமும், அன்று மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடந்தது. தொடர்ந்து மறுநாள் காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முக்கியமான நிகழ்ச்சி ஏப்ரல் 19 நடந்தது.

பிரம்மாண்ட ஆன்மிகத் திருவிழாவான சித்திரைத் திருவிழாவை கூட புரிந்துகொள்ளாமல் அன்று தேர்தல் வைத்துவிட்டார்களே என்று மதுரை மக்கள் புலம்பித் தள்ளினர். மதுரைக்கு தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையமோ தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தெரிவித்தது. நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து இரண்டு மணி நேரம் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்தது தேர்தல் ஆணையம். இப்படி 2019 நாடாளுமன்றத் தேர்தல் தேதி மதுரையில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த வருடம் மதுரையில் தேரோட்டம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா ஏப்ரல் 22, 23 தேதிகளில் தான் வருகிறது. அதற்கு முன்பே தேர்தல் வந்துவிடுவதால் மதுரை மக்களுக்கு இந்த தேர்தல் தேதியால் ஹேப்பி.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமர் வருகையால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை காட்டம்!

Kanguva: டீசர் ரிலீஸ் தேதி இதுதானா?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0