பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
மதுரையில் செப்டம்பர் 22ம் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்றுநோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமையவுள்ளது.
மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.
ஜே.பி.நட்டாவின் இந்த பேச்சு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்தனர்.
குறிப்பாக, காங்கிரஸ் எம்.பிக்கள் இவரது கருத்தை விமர்சித்திருந்தனர்.
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கூறப்பட்ட இடத்திற்கு செப்டம்பர் 23ம் தேதி சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது இருவரும் நட்டாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘95 சதவீதம் முடிந்த எய்ம்ஸ் எங்கே?’ என்ற பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக ஆட்சி : புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் எம்.பி மாணிக்கம் தாகூரும் சென்றோம்.
கீழ்வானம்வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என்று பதிவிட்டிருந்தார்.
அதுபோல் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ”டியர் ஜேபி நட்டா, 95 சதவீதம் முடிந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்றி.
நானும், மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூரில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டடத்தை யாரோ திருடிவிட்டார்கள்.
95 சதவீத கட்டுமான பணிகள் முடிந்ததாக ஜே.பி நட்டா கூறிய மதுரை எய்ம்ஸ் பகுதியில் தான் நிற்கிறோம்.
ஆனால் இங்கே ஒன்றுமே கட்டப்படவில்லை. இப்படிதான் மத்திய அரசும், பாஜகவும் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 24) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள்.
இதில், ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை. எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்றுதான் அவர் கூறினார்.
அவர் கூறியதை புரிந்துகொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்” என்றார்.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா ஏன் நிறுத்திக் கொண்டார்?
பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள்தோறும் 1000 புறநோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே?.
பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவைசிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?.
பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே?” என பதிவிட்டுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதற்காக விசாலமான சாலை மற்றும் கட்டிமுடிக்கப்படாத சுற்றுச்சுவர் தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை என்பதே உண்மை.
கோவை புது மாசெக்கள்: செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்!
சீன அதிபர் கைது? வைரலாகும் வீடியோ!