95% முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ் : பொட்டல்காடாக மதுரை எய்ம்ஸ்!

அரசியல்

இமாச்சல பிரதேசத்தில் நாளை (அக்டோபர் 5) பிரதமர் மோடி புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை அங்கு பயணம் மேற்கொள்கின்றார்.

அங்கு அவர் ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

madurai aiims still stand as empty - su venkatesan

அதில் முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை நாளை முற்பகல் 11.30 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடியால், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

madurai aiims still stand as empty - su venkatesan

அதனை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மருத்துவமனை கட்டட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

மொத்தம் 247 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், 18 சிறப்பு மற்றும் 17 தனிசிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 750 படுக்கைகள் அமைந்துள்ளன.

சுற்றுச்சுவர் மட்டுமே!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த தொகுதியான பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது மீண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவாத பொருளாக மாறியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அப்பகுதியில் எந்த கட்டிட பணிகளும் தொடங்கப்படாத நிலையில் 90 சதவீத சுற்றுச் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

அண்மையில் தமிழகம் வந்த ஜே.பி.நட்டாவும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிவடைந்துவிட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுதியது.

madurai aiims still stand as empty - su venkatesan

பொட்டல்காடாக மதுரை எய்ம்ஸ்!

இதுகுறித்து மதுரை எம்பி. தனது ட்விட்டர் பக்கத்தில், ”உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை அக்டோபர் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்.

அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது.

அந்த பொட்டல்காட்டைக் காட்டி, ’95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது.

திரு ஜெ.பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை எய்ம்ஸ்: ப.சிதம்பரம் நக்கல்!

மதுரவாயல் – துறைமுகம் சாலை 2024ல் திறப்பு : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.