மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக உண்மையை விளக்க மத்திய அரசு முன்வருமா என்று மக்கள் நீதிமய்யம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
அண்மையில் மதுரைக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிரதமர் மோடி அதனை திறந்து வைப்பார் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்றனர்.
பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி இருவரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம் என்று சு.வெங்கடேசன் கிண்டலடித்து இருந்தார்.
இதனிடையே திருச்சியில் இன்று(செப்டம்பர் 24) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், எய்ம்ஸ் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் 95 சதவீதமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தான் நட்டா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் வெற்று விளம்பரம் செய்ய கூடாது என்றார்.
இப்படி எய்ம்ஸ் குறித்து ஒரு குழப்பம் நீடித்து வரும் நிலையில் அதனை மத்திய அரசு விளக்க முன்வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் இன்று (செப்டம்பர் 24) வலியுறுத்தி இருக்கிறது.
“2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை.
பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
எந்தெந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தான தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும். பாஜகவின் சாதனையாகக் கூறிக்கொள்ளும் எய்ம்ஸ் பெயரில் புனைவுகள்தான் உலவுகின்றன.
எனவே, திட்டத்தின் உண்மை நிலை குறித்து வெளிப்படையாக விளக்கி விட்டு, உரிய நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவமனையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
கலை.ரா
நானே வருவேன் “இரண்டு ராஜா” பாடலில் என்ன ஸ்பெஷல்?
காங்கிரஸ் தலைவர் தேர்தல் : சசிதரூர் எம்.பி போட்டி!