வைஃபை ஆன் செய்ததும் தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வு யூட்யூப்பில் இருந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு சில போன் கால்கள் பேசி விட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாட்டில் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப பதிவு நிகழ்வை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
இதன் மூலம் பெண்கள் வாக்கு வங்கி திமுகவுக்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்… இன்னொரு பக்கம் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கும் அதிமுக மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது பற்றிய தொடர் ஆலோசனைகளில் எடப்பாடி ஈடுபட்டிருக்கிறார். மதுரை மாநாட்டுக்காக அதிகபட்ச கூட்டத்தை தென் மாவட்டங்களில் இருந்து கூட்டுவது என்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்தும் கூட்டத்தை கூட்டுவது என்றும் எடப்பாடி முடிவு செய்துள்ளார்.
இதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களையும் அறிவித்துள்ளார் எடப்பாடி.
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை பங்கேற்கச் செய்து… மதுரை மாநாட்டுக்கு கூட்டம் திரட்டுவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைகளையும் செய்ய இருக்கிறார்கள்.
இது தவிர அதிமுகவுக்கு தற்போது இருக்கும் 60 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒவ்வொருவரும் தொகுதியில் இருந்து குறைந்தபட்சம் 2000 பேரை திரட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கிறார் எடப்பாடி. மதுரை மாநாட்டின் கூட்டம் லட்சக்கணக்கில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது மெகா கனவு.
இந்த நிலையில் மதுரை மாநாட்டை வைத்து தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை நிலை நிறுத்துவதற்காக பிரதமர் மோடியை இந்த மாநாட்டுக்கு அழைக்கவும் எடப்பாடி முடிவு செய்துள்ளார் என்கின்றார்கள் சேலம் வட்டாரத்தில்.
வேலுமணியோடு எடப்பாடி நடத்திய ஆலோசனையின் போது மோடியை இந்த மாநாட்டுக்கு அழைப்பது பற்றி இறுதி செய்யப்பட்டு சமீபத்தில் டெல்லி சென்றபோது மோடியிடமும் முதற்கட்டமாக தகவலை தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி.
மோடி வருகை தருவதற்காக தான் மாநாடு தேதி ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை தாண்டி குறிக்கப்பட்டது என்றும் சேலம் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
நாம் ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் தெரிவித்திருந்தது போல வரும் ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை அண்ணாமலை இந்த பாதயாத்திரை துவக்க விழாவிற்கு அழைக்கிறார்.
இதே போல மதுரை மாநாட்டுக்கு பிரதமர் மோடி அழைக்கப்படுவார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு இந்த மதுரை மாநாடு உதவும் என்று நம்புகிறார் எடப்பாடி. தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு எம்பி யும் தனக்கு அடுத்த ஆட்சி அமைப்பதற்கு பெரிய உதவியாக இருக்கும் என்று மோடியும் கருதுகிறார்.
அதனால் மதுரை மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைப்பார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.