அதிமுக மாநாடு முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளதாகவும், எடப்பாடியின் வேஷம் கலைந்து விட்டதாகவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 20) மாநில மாநாடு நடைபெற்றது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாவட்டச் செயலாளர்கள் பேசினர். பலரும் மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு குறித்து கடுமையாக விமர்சித்தனர்.
தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்காத திமுக அரசுக்கு எதிராக நாம் நடத்திய ஆர்ப்பாட்டம், தமிழகம் முழுவதும் கவனம் ஈர்த்தது.
அதற்கு முன்னதாக நாம் திருச்சியில் நடத்திய மாநாட்டில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் நம் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டியுள்ளோம். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
வரும் மாதங்கள் தேர்தலுக்கு தயாராகும் நாட்களாக நமக்கு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பூத், வார்டு வாரியாக நாம் உழைக்க வேண்டும்.
வெறும் வேட்பாளர் பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு கோடி, இரண்டு கோடி தொண்டர்களை சேர்த்துவிட்டோம் என்று ஒருவர் பொய்யான தகவலை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் உண்மையான அதிமுக தொண்டர்கள் நமது பக்கம் உள்ளனர். மேலும் பலகோடி பேரையும் சேர்க்க உள்ளோம். அதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்வது மட்டுமல்ல.. அதிமுக தலைமை அலுவலகத்தையும் கைப்பற்றுவோம்” என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவதில்லை என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. உங்களுக்கு சொல்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள்.
தொடர்ந்து அவர், எடப்பாடி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தழுவியுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் நாம், டிடிவி தினகரன் வாபஸ் பெற்றும் எடப்பாடியால் ஜெயிக்க முடியவில்லை. தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியையும் தோற்கடித்து விடுவாரோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடியை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், ”அதிமுக மாநாடு முற்றிலும் தோல்வியை தழுவியுள்ளது. எடப்பாடியின் வேஷம் கலைந்துள்ளது. தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” என்று தெரிவித்து விட்டு சென்றார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
FIFA Worldcup: 2010 சம்பவத்தை பிரதிபலித்த ஸ்பெயின் மகளிர் அணி!