மதம் கொண்ட யானை திமுக என்று நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுக வயதான யானை என்று விமர்சித்துள்ளார்.
ஆகஸ்டு 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்து விட்டு, மாநாடு ஏற்பாட்டு குழுவினர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில். “கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே சிறப்பாக செயல்பட்டது எடப்பாடி ஆட்சிதான்.
எந்த மாநாடு நடத்தினாலும் அதிமுக விற்கு வெற்றி முகம்தான். 5 லட்சம் குடும்பங்களுக்கு பொது செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார்.
அப்போது அவரிடம், பாஜக பேரணிக்கு அழைப்பு வந்துள்ளதா? என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அண்ணாமலை பேரணியில் அதிமுக பங்கேற்குமா என்று கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திரும்பத் திரும்ப ஆட்சியை பெருமையாக முதல்வர் பேசிக்கலாம். திமுக ஆட்சியில் எல்லா விலைவாசியும் அதிகரித்து உள்ளது மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலை ஏற்றப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதற்கு திமுகவே சான்று. மூவாயிரம் பார் லைசென்ஸ் இல்லாமல் நடத்தலாம் என தற்போதைய ஆட்சி கூறுகிறது.
இன்றைக்கு திமுக ஏழரை லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. தொண்டர்கள் பயந்துள்ளனர் அமைச்சர்கள் மட்டும் கொள்ளையடிக்கின்றனர். ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்றார்கள் தேர்தல் வாக்குறுதியில், ஆனால் அதை இப்போது மாற்றி பல நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
ஜெயலலிதா அனைவருக்கும் விலையில்லா மிக்சி மற்றும் கிரைண்டர், அரசு பள்ளிகளில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி எங்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்டது. கலைஞர் கூட அனைவருக்கும் தொலைக்காட்சி கொடுத்தார் ஆனால் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் கொடுத்த அனைத்து திட்டத்தையும் நிறுத்திவிட்டார்.
முதல்வர் பொதுக்கூட்டத்தில் கூறினார் மதம் கொண்ட யானை திமுக என்று , திமுக வயதான யானை. திமுக அமைச்சர்களுக்கு தெனாலிராமன் கமலஹாசனை போல் எதை கண்டாலும் பயம்” என்று கூறினார்.
இச்சூழலில் செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை 27) வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், ”திமுக மக்கள் மனம் விரும்பும் பட்டத்து யானை. அது மாட்சிமை மிக்க ஓர் ஆட்சிக்கான அடையாளம் மட்டுமல்ல; எண்ணிறந்த போர்க்களங்களைக் கண்டு, எதிர்ப்படும் எதிரிகளைப் பந்தாடி வெற்றி வாகை சூடி வரும் போர்யானையும் கூட.
சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய நான்கு பலமிக்க கால்களினாலும், மக்கள் நலனுக்கென்றே இயங்கும் உறுதி மிக்க துதிக்கையினாலும், நிமிர்ந்து நிலை பெற்று நிற்கும் இந்த யானை, ஆதரவற்றவர்களை அரவணைக்கவும் செய்யும்; ஆணவப்போக்கினால் சீண்டியோரைத் தூக்கி வீசவும் செய்யும்.
இது ஊரறிந்த உண்மை என்றாலும், யானை என்னும் பேருயிரின் ஆற்றலைக் குறித்து சில நோய்ந்த மாடுகள் இன்றைக்கு விசனப்படுவதுதான் விசித்திரமாக இருக்கின்றது” என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” – அண்ணாமலை
“விசாரணையின் போது கைது செய்ய ED-க்கு அதிகாரமில்லை” – கபில் சிபல் வாதம்!
பயிர்கள் அழிப்பு : என்.எல்.சி.க்கு எதிராக பாமக போராட்டம்!