புதிய கிரிமினல் சட்டங்களில் குழப்பம்: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Published On:

| By Selvam

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நாடாளுமன்றத்திற்குள் புகைகுண்டு வீசிய சம்பவத்தை கண்டித்ததால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 150 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

எனவே, எந்த ஒரு விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்றியுள்ளனர். மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் சில பிரிவுகளை மாற்றம் செய்தும் சட்டங்களை சமஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

இது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களில் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அப்போது நீதிபதிகள், “அவசர கதியில் இந்த சட்டங்கள் ஏன் நிறைவேற்றப்பட்டது? இந்த சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மனு தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சசிகலாவின் ஆடி டூர்…செல்லுபடியா? தள்ளுபடியா? தென்காசியை செலக்ட் பண்ணிய பின்னணி என்ன?

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை!