செந்தில் பாலாஜி மீதான ED வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published On:

| By Selvam

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆனால், அன்றைய தினம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், வேறு ஒரு நாளைக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடர் சரிவு… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!

சொத்துக்குவிப்பு வழக்கு: கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!