தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 22) ஒத்திவைத்துள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 40 எம்.எல்.ஏ-க்கள் திமுகவில் இணைய இருந்ததாகவும், அதனை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டார் என்று பேசியிருந்தார்.
அப்பாவுவின் இந்த பேச்சு அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “40 எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் கூட வழக்கு தொடரவில்லை. அப்பாவு தனது பேச்சில் எந்த எம்.எல்.ஏ-க்கள் பெயரையும் குறிப்பிடவில்லை. பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய என்ன உரிமை உள்ளது?” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுக சார்பில் அவதூறு வழக்கு தொடர்வதற்கான அங்கீகாரத்தை கட்சி அளித்துள்ளது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்பாவு தரப்பில், “40 எம்.எல்.ஏ-க்கள் திமுகவில் இணைய இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர அவதூறு அல்ல. சபாநாயகரின் இந்த பேச்சு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பாபு முருகவேலுக்கு எந்தவகையிலும் எதிரானது அல்ல.
பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 40 எம்.எல்.ஏ-க்கள் தான் வழக்கு தொடர முடியும். ஆனால், அவர்கள் பெயரை சபாநாயகர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா: நீதிமன்றம் கண்டனம்!
நாளை வெளியாகும் ‘அமரன்’ டிரெய்லர்!