துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட் விவகாரம் தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட்டுடன் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பதிந்த டி ஷர்ட்டுடன் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை விதிக்க கேட்டு சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் மனு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் வகுக்கக் கோரி மேலும் இரு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் இன்று(நவம்பர் 14) தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரே விவகாரத்துக்கு எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு முதலில் தாக்கல் செய்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்க கோரலாம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து இவ்விரு மனுக்களும் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஏற்கனவே உதயநிதி உடை விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு அனுமதி அளித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!