no interim relief to Amar Prasad Reddy
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி முன் ஜாமீன் வழக்கில் அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 5) மறுப்புத் தெரிவித்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியைத் துவக்கி வைப்பதற்காக ஜனவரி 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கூட்டம் கூட்டுவதற்குப் பணம் விநியோகம் தொடர்பான விவகாரத்தில் கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி ஆண்டாள் தாக்கப்பட்டார்.
அவரை வீடு புகுந்து தாக்கியதாக அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டியைத் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே தன் மீது உரிய விசாரணை இன்றி பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகக் கூறி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று (பிப்ரவரி 5) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த மனு பட்டியலிடப்படவில்லை’ என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டி மனுவும் விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார் .
அமர் பிரசாத் ரெட்டி தரப்பில், வழக்கை ஒத்திவைப்பதாக இருந்தால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதி, வழக்கைப் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இடைக்கால நிவாரணம் வழங்கப்படாத நிலையில் அமர் பிரசாத் ரெட்டி எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“என் கைதில் ஆளுநருக்கும் தொடர்புள்ளது” -சட்டமன்றத்தில் சீறிய முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்
எல்லா கோட்டையும் அழிங்க… புது இயக்குநரை தேடும் விஜய்?
no interim relief to Amar Prasad Reddy