உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 6) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு நேரடி நியமனம் மேற்கொள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த தேர்வில் சித்த மருத்துவம், பி.டி.எஸ்., படித்தவர்களும் பங்கேற்று தேர்வு எழுதினர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வானோர் பட்டியலில் சித்த மருத்துவம் படித்தவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
சித்த மருத்துவம், பி.டி.எஸ்., படித்தவர்களின் பெயர்களை பரிசீலிக்காமல் அரசு வெளியிட்ட தேர்வாளர்கள் பட்டியல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில், “உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம் தொடர்பாக அரசு வெளியிட்ட தேர்வானோர் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சித்த மருத்துவம் படித்தவர்களின் பெயர்களை பரிசீலித்து புதிய தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் தரப்பில், ”இப்பிரச்சினையில் ஏற்கனவே பிற உயர்நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அதனடிப்படையில் இம்மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “உணவு பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், எண்ணெய் தொழில்நுட்பம், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், முதுகலை வேதியியல் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்ற இளங்கலை மருத்துவ பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்தில் பட்டம் என்பதை விரிவாக புரிந்து கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தால் வழங்கப்படும் மருத்துவ பட்டமானது விதிகளுக்குட்பட்டது. சித்த மருத்துவ முறை தமிழகத்தின் தனிச்சிறப்பு. இது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. தமிழக கோயில்களில் சித்த மருந்தகம் செயல்பட்டது. அதன் தற்போதைய நிலை தெரியவில்லை. கொரோனா நெருக்கடியின்போது சித்தா டாக்டர்கள் ஆற்றிய பங்கை மறந்துவிட முடியாது. டெங்கு பரவியபோது நிலவேம்பு கஷாயம் வழங்குவதை அரசு ஊக்குவித்தது.
சித்தா பட்டதாரிகளை தேர்வு பட்டியலிலிருந்து தகுதி நீக்கம் செய்வது சித்தா அமைப்பை நவீனமற்றது என்று முத்திரை குத்துவதற்கு சமம். எந்த அமைப்பும் பழமையானதாக அல்லது நவீனமாகவோ இருக்கலாம். அது காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளதா, நமது தேவைகளுக்கு பொருத்தமானதா என்பதுதான் கேள்வி. சித்த மருத்துவம் உயிர்ப்புடன் நடைமுறையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சித்த மருத்துவக் கல்லுாரிகளை அரசு நடத்துகிறது. அதில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ்.,-பி.டி.எஸ்., அல்லது சித்தா என ஏதேனும் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நவீன மருத்துவ முறை உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கு பரிசீலிக்க மனுதாரர்கள் தகுதியுடையவர்கள் என கருதுகிறேன். மனுதாரர்களை நீக்கிய தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களை பரிசீலித்து மாற்றியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
“நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் பேச்சு”: ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்!
“ரூ.108 கோடியில் நான்கு சிட்கோ தொழிற்பேட்டைகள்”: தா.மோ.அன்பரசன்