முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா என தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தொடர்ந்து விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 10) தீர்ப்பளித்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலமானது பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்படும் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், திமுக அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்துள்ளது.
அரசியல் காரணத்துக்காக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் இந்தப் புகாரை நிலுவையில் வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆணையம் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.
தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பஞ்சமி நிலமா, இல்லையா என வருவாய்த் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தலையிட முடியாது.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, “பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவு செய்வதற்கான இறுதியான ஆதாரம் இல்லை.
ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது. விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தொடர்ந்து விசாரிக்கலாம். ஆணையம் புதிதாக ஒரு நோட்டீஸ் அனுப்பி அனைத்து தரப்பின் விளக்கத்தை பெற்று விசாரணையை நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம் விலையில் மாற்றமா?: இன்றைய நிலவரம்!
பொங்கல் பரிசு தொகுப்பு: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இனி நடிக்க மாட்டேன்: விஜய் சேதுபதி